ஆன்லைனில் ரம்மி.. மதுவுக்கு அடிமை.. அடித்தே கொன்ற தம்பி..!
தூத்துக்குடியில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தவர் தொழிலில் நஷ்டமடைந்து விட்டதாகக் கூறி குடும்ப சொத்தை விற்க முயன்றதால் ஏற்பட்ட தகராறில் சொந்த தம்பி மற்றும் உறவினரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது..
தூத்துக்குடி அருகே உள்ள சில்லாநத்தம் பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி. இரண்டு லாரிகளை வைத்து தொழில் செய்து வந்த நிலையில் தொழிலில் சுமார் 50 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
இதற்காக, சில்லாநத்தத்தில் உள்ள பூர்வீக வீட்டை விற்று கடனை அடைக்க வேண்டுமென கூறி வந்ததற்கு அவரது தம்பி முத்துராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தொழிலில் நஷ்டம் ஏற்படவில்லை, ஆன்லைன் ரம்மி விளையாட்டில் நல்லதம்பி பணத்தை இழந்து விட்டதாகவும், மதுபோதைக்கு அடிமையாகி விட்டதாகவும் குடும்பத்தினரிடம் முத்துராஜ் கூறி வந்துள்ளார்.
இந்நிலையில், அண்ணனை மதுபோதையிலிருந்து விடுவிக்கும் சிறப்பு சிகிச்சைக்காக மதுரைக்கு சித்தப்பா மகன் முத்துராஜ் உடன் காரில் அழைத்துச் சென்றார் தம்பி முத்துராஜ். காரில் செல்லும் போது வீடு விற்பனை செய்வது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் காரிலிருந்த இரும்பு கம்பியால் உறவினர் முத்துராஜை நல்லதம்பி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால், பண்டாரம்பட்டியில் கார் நிறுத்தப்படவே காரிலிருந்து இறங்கி காட்டுப்பகுதிக்குள் ஓடிய நல்லதம்பியை இரண்டு முத்துராஜ்களும் சேர்ந்து தலையில் கம்பியால் தாக்கியதாகவும், இதில், அதே இடத்தில் நல்லதம்பி இறந்ததாகவும் கூறப்படுகிறது. அண்ணன் இறந்து விட்டதால் பதற்றமடைந்த இருவரும் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இதற்கிடையில்,சித்தப்பா மகன் முத்துராஜ் மட்றூம் தம்பி முத்துராஜ் இருவரைம் புதியமுத்தூர் போலீசார் கைது செய்து சிப்காட் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மது, சூது பழக்கத்தால் பாழாய்போன அண்ணனை திருத்த நினைத்து கொலை பழிக்கு ஆளான தம்பி என ஒரு குடும்பமே நிர்கதியாய் தவிக்கும் இந்த சம்பவமும், மது, சூது தீமைக்கு மற்றொரு சாட்சியே.
Comments