‘விடுதலை’ படத்தை பார்க்க சிறுவர் சிறுமிகளுக்கு தடைபோட்ட போலீஸ்..! A சான்றிதழால் உண்டான சிக்கல்
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஐநாக்ஸ் திரையரங்கில், விடுதலை படத்தை பாதியில் நிறுத்திய போலீசார், படம் பார்க்க தங்களது குடும்பத்தினருடன் வந்திருந்த சிறுவர் சிறுமிகளை, திரையரங்கில் இருந்து வெளியேற்ற முயன்றதால் வாக்குவாதம் ஏற்பட்டது. ‘ஏ’ சான்றிதழ் பெற்றதால் விடுதலைக்கு உண்டான சிக்கல் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.
வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள படம் விடுதலை . இந்தப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள சந்திரா மாலில் உள்ள ஐநாக்ஸ் திரையரங்கில் வெள்ளிக்கிழமை மாலைக்காட்சி விடுதலை படம் ஓடிக் கொண்டிருந்த போது இடையில் நிறுத்தப்பட்டது.
அங்கு வந்த போலீசார் இந்த படம் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பார்க்க தகுதியான படம் என்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் சிறுவர் சிறுமிகளை படம் பார்க்க அனுமதிக்க இயலாது என்று கூறி குடும்பத்தினருடன் வந்திருந்த சிறுவர்களை வெளியே அழைத்துச்செல்லுமாறு கூறியதால் தாய்மார்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
தங்கள் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான படங்களை காண்பிக்க வேண்டும் என்று தங்களுக்கு தெரியும் என்று எதிர்த்து பேசிய பெண் ஒருவர், அரைகுறை ஆடையுடன் பெண்கள் ஆடுவது போன்ற காட்சி உடைய திரைப்படங்களுக்கு எப்படி சிறுவர் சிறுமிகளை அனுமதிக்கின்றனர் என்று கேள்வி எழுப்பினார்
தொடர்ந்து இது ஆபாச காட்சிகள் உள்ள படமல்ல என்றும் வன்முறை காட்சிகளுக்காக ஏ சான்று வழங்கப்பட்ட படம் என்றும் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்
பெற்றோர் பலத்த எதிர்ப்பு தெரிவித்ததால் ,சிறுவர் சிறுமிகளை தொடர்ந்து படம் பார்க்க அனுமதித்து விட்டு போலீசார் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றனர். பெண்கள் கைதட்டி ஆரவாரம் செய்து படத்தை தொடர்ந்து பார்க்க தொடங்கினர்.
இனி வரும் காலங்களில் விடுதலை படத்திற்கு வயது வந்தோரை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றும் சிறுவர் சிறுமிகளை முன் கூட்டியே தடுத்து நிறுத்த திரையரங்கு நிர்வாகிகளுக்கு போலீசார் அறிவுறுத்தி சென்றிருப்பதாக கூறப்படுகின்றது
Comments