உயிர் பலிவாங்கிய போலீசாரின் பேரிகார்டு.. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அலட்சியம்.. லாரியில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ..!
மதுரை - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் கொடைரோடு அருகே விபத்தை தடுப்பதற்காக போலீசார் வைத்திருந்த பேரிகார்டில் மோதிய இரு சக்கர வாகன ஓட்டி, கண்டெய்னர் லாரியின் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது...
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூரை அடுத்து மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், போலீசார் விபத்துக்களை தடுப்பதற்காக இரு பேரிகார்டுகளை வைத்துள்ளனர். வியாழக்கிழமை காலை இந்த சாலை வழியாக அரசு கேபிள் டிவி ஊழியர் தமிழரசன் என்பவர் தனது மனைவி மற்றும் மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றார்.
சாலையில் இருபுறமும் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டின் நடுவில் கடக்க முயன்ற போது இணையாக சென்ற கண்டெய்னர் லாரி மீது உரசி நிலை தடுமாறிய அவர் பைக்குடன் கீழே விழுந்தார்.
இதில் வேகத்தை குறைக்காமல் பேரிகார்டுகளுக்குள் புகுந்து சென்ற கண்டெய்னர் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய தமிழரசன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
அவரது சடலத்தின் ஒரு பகுதி 1 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டது.
பதறி அடித்து எழுந்த அவரது மனைவி கதறி அழுதபடியே குழந்தையை தூக்கினார்.
காயமடைந்த மனைவியும், குழந்தையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தின் போது இருசக்கர வாகனத்தின் பின்னால் சென்று கொண்டிருந்த ஒரு காரின் முன் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் இந்த அதிர்ச்சிகரமான காட்சி பதிவானது. இந்த காட்சியை வைத்து போலீசார் வைத்த பேரிகார்டு உயிர் பலி வாங்கியது தெரியவந்தது. விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் லாரியை ஓட்டிச் சென்ற ஓட்டுநரை போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது. விரைவாக செல்ல ஏதுவாக சாலை அமைத்துவிட்டு, அதில் வேகத்தை குறைக்க பேரிகார்டு வைத்து விபத்து நிகழ காரணமான போலீசார் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள அம்மையனாயக்கனூர் போலீசார் எஸ்.பி உத்தரவுபடி பேரிகார்டு வைத்ததாக தெரிவித்தனர். தான் இங்கு பணிக்கு வருவதற்கு முன்பாகவே இந்த இடத்தில் பேரிகார்டு வைக்கப்பட்டு இருந்ததாக எஸ். பி விளக்கம் அளித்தார்.
இங்கு மட்டுமல்ல தேசிய நெடுஞ்சாலைகளில் பெரும்பாலான இடங்களில் வேகத்தை குறைக்கவும், சோதனைக்காகவும் போலீசார் பேரிகார்டுகளை வைத்து வாகன ஓட்டிகளின் உயிருக்கு வேட்டு வைப்பதாக பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
இவற்றை கண்காணித்து அப்பறப்படுத்த வேண்டிய தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் கண்டு கொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
Comments