எம்ஜிஆரின் சத்யா ஸ்டூடியோ ரூ.31 கோடி குத்தகை பாக்கியை செலுத்த நீதிமன்றம் உத்தரவு..! இடத்தை அரசு பயன்படுத்த உத்தரவு

0 12257
எம்ஜிஆரின் சத்யா ஸ்டூடியோ ரூ.31 கோடி குத்தகை பாக்கியை செலுத்த நீதிமன்றம் உத்தரவு..! இடத்தை அரசு பயன்படுத்த உத்தரவு

93 ஆயிரத்து 540 சதுர அடி அரசு நிலத்திற்குரிய குத்தகை பாக்கி 31 கோடி ரூபாயை சத்யா ஸ்டுடியோ நிர்வாகத்திடமிருந்து வசூலிக்கவும், அவர்களது பயன்பாட்டில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தை வேலி அமைத்து பாதுகாக்கவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெப்டியூன் ஸ்டூடியோவாக இருந்து, பின்னர் மறைந்த தமிழக முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரின் கரங்களுக்கு வந்த பின்னர் பிரபலமாக திகழ்ந்தது சத்யா ஸ்டுடியோ. 

சென்னை அடையாறில் உள்ள இந்த ஸ்டூடியோவின் தற்போதைய நிர்வாக இயக்குனராக சுவாமி நாதன் என்பவர் உள்ளார். இதன் வளாகத்தில் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இந்த ஸ்டூடியோவின் முன்பக்கம் உள்ள 93 ஆயிரத்து 540 சதுர அடி நிலத்தை தமிழக அரசிடம் இருந்து 1968 ஆம் ஆண்டு 30 வருட குத்தகைக்கு சத்யா ஸ்டூடியோ நிர்வாகம் பெற்றிருந்தது.

1998 ஆம் ஆண்டோடு அந்த குத்தகை காலம் முடிவடைந்த நிலையில், அந்த இடத்தை தொடர்ந்து பயன்படுத்த வசதியாக, குத்தகை காலம் மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த 2004ஆம் ஆண்டு வரை இந்த நிலத்துக்கு குத்தகை தொகையாக, 31 கோடியே 9 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் வாடகை பாக்கியை செலுத்தக் கோரி மயிலாப்பூர் வட்டாட்சியர் மூலமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அப்படி இருந்தும் செலுத்த வில்லை.

இந்த நிலையில் 2008ஆம் ஆண்டு குத்தகை காலம் முடிந்ததும் நிலத்தை திருப்பி எடுத்து அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சத்யா ஸ்டுடியோ சார்பாக நிர்வாக இயக்குனர் சுவாமிநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நிலுவையில் உள்ளபோது, 2019ஆம் ஆண்டில் அடையாறு நோக்கி செல்லக்கூடிய பசுமை வழி சாலை மற்றும் டி.ஜி.தினகரன் சாலை ஆகியவற்றில் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக, அரசு இசைக் கல்லூரி வழியாக சத்யா ஸ்டுடியோ அருகில் அமைந்துள்ள மீட்கப்பட்ட நிலம் வழியாக துர்காபாய் தேஷ்முக் சாலைக்கு இணைப்பு சாலை ஒன்றை அமைக்க அரசு திட்டம் தீட்டியது.

சத்யா ஸ்டூடியோ நிர்வாகம் தொடர்ந்த வழக்கு காரணமாக அந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த இயலாமல், அரசு துறைகளுக்கு இடையே நில பரிமாற்ற திட்டங்கள் நிலுவையில் இருந்து வந்தது.

இந்த நிலையில் 2008ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை , புதன்கிழமை மீண்டும் விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், அரசுக்கு செலுத்த வேண்டிய 31 கோடியே 9 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் வாடகை பாக்கியை வசூலிக்க தேவையான அனைத்து நடவடிக்கையும் மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், சத்யா ஸ்டுடியோ அருகில் உள்ள அரசு நிலத்திற்கு வேலி அமைத்து பாதுகாக்கவும், 2019ஆம் ஆண்டு திட்டப்படி இணைப்பு சாலை அமைக்கும் பணியை தொடரவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments