'உல்லாச பிரியர்களின் சொர்க்கபுரி' ரூ.730 கோடி வாடகை பாக்கி செலுத்த கிண்டி ரேஸ்கோர்சுக்கு நீதிமன்றம் உத்தரவு..! ரூ.12 ஆயிரம் கோடி பாக்கி குறித்து நோட்டீஸ்

0 3000

கிண்டியில் அரசுக்கு சொந்தமான 160 ஏக்கர் நிலத்துக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கி 730 கோடியே 86 லட்சத்து 81 ஆயிரத்து 297 ரூபாயை ஒரு மாதத்தில் செலுத்தும்படி, சென்னை ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது..

சென்னை ரேஸ் கிளப்புக்கு 1945ம் ஆண்டு 160 ஏக்கர் 86 செண்ட் நிலம் 99 ஆண்டுகள் குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. ஆண்டுக்கு 614 ரூபாய் 13 காசு வாடகையாக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், 1970ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி முதல் வாடகையை உயர்த்துவது தொடர்பாக விளக்கமளிக்கும்படி மாம்பலம் - கிண்டி தாசில்தார் ரேஸ் கிளப்புக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த நோட்டீசுக்கு பதிலளித்த ரேஸ்கிளப், 1945ம் ஆண்டு ஒப்பந்தத்தில் வாடகை உயர்த்துவது குறித்த பிரிவு ஏதும் இல்லை எனத் தெரிவித்தது. இந்த விளக்கத்தை நிராகரித்த அரசு, 730 கோடியே 86 லட்சத்து 81 ஆயிரத்து 297 ரூபாய் வாடகை பாக்கி செலுத்தும்படி ரேஸ் கிளப்புக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சந்தை மதிப்பு அடிப்படையில் வாடகை உயர்த்த அரசுக்கு அதிகாரம் உள்ளதாக கூறி, 1970 முதல் 2004 ஆம் ஆண்டு வரை மொத்தம் 730 கோடியே 86 லட்சத்து 81 ஆயிரத்து 297 ரூபாய் வாடகை மற்றும் வாடகை பாக்கியை ஒரு மாதத்தில் செலுத்த ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார். தவறினால் காவல் துறையினர் உதவியுடன் நிலத்தை அரசு எடுத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

சுதந்திரத்துக்கு முன் மேற்கொண்ட குத்தகையை அரசு மறு ஆய்வு செய்திருக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, 2004ம் ஆண்டு முதல் தற்போது வரையிலான கால கட்டத்திற்கு உயர்த்தப்பட்ட வாடகை பாக்கி 12 ஆயிரத்து 381 கோடியே 35 லட்சத்து 24 ஆயிரத்து 269 ரூபாயை 2 மாதங்களில் செலுத்தக் கூறி ஒரு மாதத்தில் புதிய நோட்டீஸ் அனுப்பவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஒரு சில பணக்காரர்களுக்காக ஒதுக்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்தில் தற்போது நடைபெறும் செயல்களில் எந்த பொது நல நோக்கமும் இல்லை எனவும், நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த நிலத்தை மீட்டு மக்கள் நலனுக்கு பயன்படுத்தலாம் எனவும் அரசுக்கு நீதிபதி யோசனை தெரிவித்துள்ளார்.

அரசு நிலங்களின் குத்தகையை உயர்த்துவது என்பது அரசின் கொள்கை முடிவு எனத் தெரிவித்த நீதிபதி, அதை முறையற்றது என்றோ, சட்டவிரோதமானது என்றோ கூற முடியாது எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

பொதுநலனை உறுதி செய்யும் வகையிலும், அரசு வருவாயை காக்கும் வகையிலும், தமிழகம் முழுவதும் அரசு நிலங்களின் குத்தகைகளை மறு ஆய்வு செய்யவும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments