மதுரை நீதிமன்ற வளாகத்தில் ரூ.166 கோடியில் கூடுதல் கட்டடங்கள் கட்ட அடிக்கல்
மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் 166 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் நீதிமன்ற கட்டடத்திற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய முதலமைச்சர், உச்சநீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வர வேண்டும் என்றும், சென்னை, மும்பை, கொல்கத்தாவில் உச்சநீதிமன்ற கிளையை தொடங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பின்னர் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, பல மாநிலங்களில் காற்றோட்டமே இல்லாத அறைகளில் நீதிபதிகளும், வக்கீல்களும் பணியாற்றும் நிலை உள்ளதாக கூறினார். மேலும், அப்பகுதிகளில் பெண்களுக்கான நாப்கின் எந்திர வசதிகள் கூட இல்லை என சுட்டிக்காட்டிய அவர், தமிழக அரசு நீதித்துறை கட்டிடங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை முனைப்புடன் மேம்படுத்தி வருவதாக குறிப்பிட்டர்.
உச்சநீதிமன்றம் ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஆனது என கூறிய அவர், இணையவழி மூலமாக நீதிபதி டெல்லியில் இருக்க, வக்கீல்கள் மேலூர், விருதுநகரில் இருந்து வாதிட இயலும் என்றார். அதேபோல், நீதிமன்ற செயல்பாடுகளை நேரலை செய்வதன் மூலம் சட்டக்கல்லூரி மாணவர்களும் நீதிமன்ற நடைமுறைகளை இலகுவாக கற்க ஒரு வாய்ப்பாக அமையும் எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார்.
Comments