வெள்ளக்கார பெண் புகைப்படத்தை நம்பி ரூ.34 லட்சம் இழந்த தொழில் அதிபர்..!! நைஜீரியன் கும்பலை தூக்கிய போலீஸ்
இரத்த புற்றுநோயை குணப்படுத்தும் மூலிகை ஆயில் விற்பதாக வெள்ளைக்கார பெண்ணின் புகைப்படத்தை பயன்படுத்தி தொழிலதிபரிடம் 34 லட்சம் ரூபாய் மோசடி செய்த 4 நைஜீரியர்களை மும்பையில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் 25 வயது தொழில் அதிபர் விஜய். இவர் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்து வருகின்றார். இவரை கடந்த அக்டோபர் மாதம் லிங்க்டு இன் இணையதளம் மூலமாக சாட்டிங்கில் நோரா என்ற பெண்மணி கனடாவிலிருந்து பேசுவதாக கூறி அறிமுகமாகி உள்ளார்.
தான் கனடாவில் மருத்துவ நிறுவனத்தில் சி.இ.ஓ வாக இருப்பதாகவும், கனடாவில் மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களை வியாபாரம் செய்வதற்கு உதவுமாறு விஜயிடம் லிங்க்டு இன் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
மருத்துவ குணம் மிக்க பொருட்களை வாங்கி அனுப்பினால் கமிஷனாக இரண்டு மடங்கு லாபம் சம்பாதிக்கலாம் எனவும் வாட்ஸ் அப் சாட்டிங்கில் ஆசை வார்த்தை கூறிய அவர், குறிப்பாக ரத்த புற்றுநோய் உள்ளிட்டவற்றிற்கு மருந்து தயாரிக்க பயன்படும் மூலிகை ஆயில் தனக்கு வேண்டும் எனவும் 1 லிட்டரின் விலை 1லட்சத்து 80 ஆயிரம் எனவும் அந்தப் பொருள் டெல்லியில் குறிப்பிட்ட நிறுவனத்தில் மட்டுமே கிடைப்பதாகவும் கூறி அந்த நிறுவனத்தின் தொடர்பு எண்ணையும் கொடுத்துள்ளார்.
அவர்களிடமிருந்து மூலிகை ஆயிலை வாங்கி தனக்கு ஏற்றுமதி செய்தால் 1லிட்டர் 4 லட்சம் ரூபாய் வரை விலை வைத்து வாங்கிக் கொள்வதாக அவர் கூறியதை உண்மை என்று நம்பி ஏற்றுமதி உரிமம் உள்ளிட்டவற்றை வாங்கிய விஜய் முதற்கட்டமாக மாதிரிக்காக 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கொடுத்து 1 லிட்டர் மூலிகை ஆயிலை வாங்கியுள்ளார்.
நோராவிற்கு தகவல் தெரிவிக்க, மூலிகை ஆயில் உண்மையானதா ? என சோதனை செய்ய வேண்டும் எனக்கூறி மும்பையில் இருந்து வெளிநாட்டு ஆசாமி ஒருவரை சென்னை விமான நிலையம் அனுப்பி வைத்துள்ளார்.
அப்போது அறிமுகப்படுத்திக்கொண்ட அவர் ஒரு ஊசியில் மூலிகை ஆயிலை எடுத்துக்கொண்டு மீண்டும் உடனடியாக மும்பைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். பின்னர் மூலிகை ஆயில் உண்மை எனக்கூறி மொத்தமாக 18 லிட்டர் மூலிகை ஆயில் வேண்டும் என ஆர்டர் கொடுத்துள்ளார்.
விஜய் அதற்கான தொகையாக சுமார் 34 லட்சம் ரூபாய் பணத்தை டெல்லி நிறுவனத்தின் வங்கி கணக்கில் 5 தவணையாக செலுத்தி உள்ளார். அந்த பணத்தை பெற்றதும், மூலிகை ஆயிலை வாங்குவதாக கூறிய நோரா முதல் மூலிகை ஆயிலை விற்றவர்கள் வரை மொத்த கும்பலும் தொடர்புகளை துண்டித்து விட்டனர்.
இதனால் சந்தேகம் அடைந்த விஜய் 34லட்ச ரூபாய் ஏமாந்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினரிடம் கடந்த டிசம்பர் மாதம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், டெல்லி நிறுவனம் மற்றும் கனடா வெள்ளைக்கார பெண் என அனைவரும் போலி என்பது தெரிய வந்தது.
கனடாவில் இருந்து பேசியதாக கூறப்பட்ட பெண்மணி போல போலியான புகைப்படங்களை பயன்படுத்தியும், வெளிநாட்டிலிருந்து பேசுவது போல தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மோசடி செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட விஜய் 34 லட்ச ரூபாய் அனுப்பிய வங்கி கணக்குகளை ஆய்வு செய்த போலீசார், மும்பையில் உள்ள கார்கர் பகுதியில் வீடு எடுத்து தங்கி இருந்த நைஜீரிய மோசடி கும்பலை சுற்றி வளைத்தனர்.
ஒரே இடத்தில் இருந்து கொண்டு, மூலிகை ஆயிலை வாங்குபவர், விற்பவர், ஆயிலை பரிசோதிப்பவர் போல நடித்து பலரிடம் இந்த கும்பல் மோசடியில் ஈடுப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது
மும்பை போலீசின் உதவியுடன் நைஜீரியா நாட்டை சேர்ந்த 4 பேரை சென்னை போலீசார் கைது செய்தனர்.
குறிப்பாக கமாடிட்டி ஸ்கேம் என்ற பெயரில் வெறும் வாட்ஸ் அப் மெசேஜ் மூலமாக மட்டுமே பேசி இந்த மோசடியை நைஜீரிய கும்பல் அரங்கேற்றி இருப்பதும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நான்கு நைஜீரியர்களையும் டிரான்ஸிட் வாரண்டு பெற்று சென்னைக்கு ரயில் மூலமாக அழைத்து வந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Comments