கட்சி விசிட்டிங் கார்டுடன் கடைக்குள் இறங்கிய வெல்டிங் கொள்ளையர்..! என்னடா புது ரூட்டா இருக்கு..!
தூத்துக்குடி அருகே விளாத்திக்குளத்தில் யூடியூப் பார்த்து நகை கடையில் கொள்ளையடித்த வெல்டிங் கொள்ளையர்கள், ரோந்து போலீசாரிடம் சிக்கியதும் தாங்கள் தமிழ்புலிகள் கட்சியை சேர்ந்தவர்கள் என போலியான விசிட்டிங் கார்டு கொடுத்து மிரட்டிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மதுரை ரோட்டில் ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான "இராஜலட்சுமி ஜூவல்லர்ஸ்" என்ற நகைக்கடையின் ஷட்டர் பூட்டையும், லாக்கரையும் கேஸ் வெல்டிங் மிஷினை கொண்டு வெட்டி கடைக்குள் புகுந்த இரு கொள்ளையர்கள் கடையில் இருந்த 109 கிராம் (13பவுன்) தங்க நகை, 25 கிலோ மதிக்கத்தக்க வெள்ளி கொலுசு, வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணம் 12,500 ரூபாய் என மொத்தமாக சுமார் ரூ.20 இலட்சம் மதிப்புள்ள பொருள்களை திருடிவிட்டு தப்பிச்சென்றனர்.
மாடியில் இருந்து கயிறு மூலம் இறங்கி மூட்டையுடன் ஓடிய ஆசாமிகளை பார்த்த பக்கத்துக்கடை வாட்ச்மேன், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தகவல் அளித்தார்.
உடனடியாக விரட்டிச் சென்ற போலீஸார் இருவரையும் கையும் களவுமாக மடக்கிப்பிடித்தனர்.
போலீசாரை மிரட்டுவதற்காக தாங்கள் இருவரும் தமிழ்புலிகள் கட்சியை சேர்ந்தவர்கள் என்று விசிடிங் கார்டு ஒன்றை எடுத்து நீட்டி உள்ளனர். போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று அந்த இரு புலிகளையும் பிதுக்கி எடுத்ததால், அவர்கள் கொடுத்தது போலியான விசிட்டிங் கார்டு என்பது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து பணம் மற்றும் நகையை பறிமுதல் செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டது தற்காலிக தூய்மை பணியாளரான முத்துகிருஷ்ணன், கார் மெக்கானிக் மாரிமுத்து என்பதும் யூடியூப் பார்த்து கொள்ளையை அரங்கேற்றியதும் தெரியவந்தது.
செவ்வாய் கிழமை இரவு 8.30 மணியளவில் திருடுவதற்கு பயன்படுத்திய கட்டிங் மிஷின், கேஸ் சிலிண்டர், உள்ளிட்ட பொருட்களை இந்த நகைக்கடையின் மேல் மாடியில் யாருக்கும் தெரியாமல் வைத்துள்ளனர்.
இதையடுத்து புதன்கிழமை இரவில் தங்களது இரு சக்கர வாகனத்தை பக்கத்து தெருவில் நிறுத்திவிட்டு, யாருக்கும் தெரியாமல் மாடியின் மேலே ஏறி படுத்துக் கொண்டுள்ளனர். பின்னர் அனைத்து கடைகளும் அடைத்த பின் நள்ளிரவில் மாடியில் இருந்து படி வழியாக கீழே இறங்கி வந்து தாங்கள் கொண்டு வந்த கட்டிங் மெஷின், கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி ஷட்டரை உடைத்து கடையினுள் சென்றுள்ளனர்.
அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் தாங்கள் கொண்டு வந்த செலோட்டோப்பை சுற்றி கேமராமீது ஒட்டி மறைத்துள்ளனர்.
அடுத்ததாக ஜுவல்லரியின் உள் அறையில் இருந்த லாக்கரில் கேஸ் வெல்டிங் மூலம் துளையிட்டு அதிலிருந்த தங்க நகைகள், வெள்ளி கொலுசுகள் வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் என கிட்டத்தட்ட 20 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அள்ளி மூட்டையாக கட்டி உள்ளனர்.
மோப்ப நாய் கண்டு பிடித்து விடக்கூடாது என கில்லி விஜய் போல மிளகாய் பொடியை கடை முழுவதும் வாசல் வரை தூவி உள்ளனர்.
இதையடுத்து திருடிய நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவர்கள், கீழே உள்ள அனைத்து கதவுகளும் பூட்டப்பட்டு இருந்ததால் அருகிலுள்ள சத்யா ஏஜென்சியின் மாடியில் குதித்து, முன் கூட்டியே கட்டி வைத்திருந்த கயிறு மூலம் இறங்கி உள்ளனர்.
கயிறில் ஈசியாக இறங்குவதற்கு நிறைய முடிச்சுகளை ஏற்கனவே போட்டு வைத்திருந்த நிலையிலும், கயிறு வழியாக இறங்கும்போது முத்துகிருஷ்ணன் தவறி விழுந்ததில் காலில் அடிபட்டு நடக்க முடியாமல் கிடந்துள்ளான்.
கயிறு மூலம் இருவர் இறங்குவதை கண்டு பக்கத்து கடை வாட்ச்மேன் சத்தமிடவே மாரிமுத்து நகையுடன் வேகமாக ஓட தொடங்கி உள்ளான். முத்துகிருஷ்ணனால் நடக்க முடியாததால் ஓரமாக ஒளிந்துள்ளான்.
இதையடுத்து ரோந்து போலீசார் இருவரையும் மடக்கிப் பிடித்துள்ளனர்.
எப்படி கொள்ளை அடித்தனர் ?என்று நடித்துக்காட்ட போலீசார் ,அந்த இரு கொள்ளையர்களையும் நகைக்கடைக்கு அழைத்துச் சென்றனர்.
கடையின் உரிமையாளர் ஆத்திரத்தில் "அவனை கொன்னுடுங்க..." என்று உரக்க கத்த.... விளாத்திகுளம் பெண் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி அந்த திருடனிடம், "உழைச்சு சம்பாதிக்கனும்... உழைச்ச காசுதான நிக்கும்..திருட்டுல வர்ரது நிக்குமா? இது தப்புதானே என்று ஒரு ஆசிரியரைப்போல கனிவாக கண்டிக்க, அதற்கு அந்த திருடனும் பள்ளி மாணவனைப் போல தப்புதான் மேடம்...மிகப்பெரிய தப்பு என தலைகுனிந்தார்.
சில தினங்களுக்கு முன்பு இந்த நகைகடை அருகில் உள்ள பைனான்ஸ் கம்பெனியில் கொள்ளை முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.
Comments