டிஎம்.எஸ், சீர்காழி கோவிந்தராஜன்... காலத்தால் அழியாத இரு இசைக் கலைஞர்களின் கானங்கள்..!

0 8869

டிஎம்.எஸ் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட டிஎம் சவுந்தர்ராஜன் 1950களில் மந்திரி குமாரி படத்துக்காக எம்ஜிஆருக்கும், தூக்குதூக்கி படத்துக்காக சிவாஜிக்கும் முதன்முறையாகப் பாடல்களைப் பாடினார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக எம்ஜிஆர்- சிவாஜி நடித்த படங்களில் பல நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடல்களைப் பாடி லட்சக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்தார் டிஎம்எஸ். 

எம்ஜிஆருக்காக ஒரு குரலிலும், சிவாஜிக்காக மற்றொரு குரலிலும் பாடல்களைப் பாடி ரசிகர்களைக் கவர்ந்திழுக்க வைத்தது இவரது தனிச்சிறப்பு. 

ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிசந்திரன், ஏவிஎம் ராஜன், நாகேஷ், சிவகுமார், முத்துராமன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் உள்பட பலருக்கும் ஏற்றார் போல் குரலை மாற்றிப் பாடி மாயாஜாலம் செய்தவர் டிஎம்.எஸ்.

எஸ்எம் சுப்பையா நாயுடு முதல் ஏஆர் ரஹ்மான் வரை 74 இசையமைப்பாளர்கள் இசையமைத்த ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியவர் டிஎம்எஸ்.

தமிழகத்து கோவில் திருவிழாக்களிலும், பண்டிகை நாட்களிலும்... ஏன் ஒவ்வொரு நாளின் காலைப் பொழுதிலும் டிஎம்எஸ் பாடிய பக்திப் பாடல்கள் ஒலிக்காத இடமே இருக்காது. 

1988ம் ஆண்டு இதே நாளில் தான் தமிழகத்தின் மற்றொரு மகத்தான பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் காலமானார். பக்தி பாடல்களைப் பாடுவதில் சீர்காழிக்கு நிகர் சீர்காழிதான்.. 

அகத்தியர் ,திருவருட்செல்வர் ,திருமலை தென்குமரி போன்ற படங்களிலும் சீர்காழி கோவிந்தராஜன் சிறப்பாக நடித்திருந்தார்.

எம்ஜிஆர், சிவாஜி ஆகியோருக்கு பல படங்களில் பாடல்களைப் பாடி ரசிகர்களுக்கு இசைவிருந்து படைத்தவர் சீர்காழி கோவிந்தராஜன்

சீர்காழி கோவிந்தராஜனின் பாடல் ஒலிக்கும் போது அலைக்கழிப்புகளுக்கு ஆளான மனமும் அமைதியாகி விடுவதும், அமைதியாக உள்ள மனமோ அலைக்கழிப்புக்கு ஆளாகி விடுவதும் ஒவ்வொரு இசைரசிகனும் உணர்ந்தவை..

திரையிசையில் சாதனை படைத்திட்ட இரு இசைக் கலைஞர்களின் கானங்கள் காலம் உள்ளவரை காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டேதான் இருக்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments