காதலித்து கைவிட்ட இளம் இராணுவ வீரர்.. இறந்த குழந்தையுடன் தவித்த பெண்..! மற்றொரு காதலியை விட்டு மிரட்டிய கொடுமை

0 3832

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, உறவுக்காரப் பெண்ணை காதலித்து கர்ப்பிணியாக்கிவிட்டு இளம் இராணுவ வீரர் ஒருவர் தலைமறைவான நிலையில், பிறந்து இறந்த பச்சிளம் குழந்தையுடன் பெண் கதறித் தவித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இறந்து போன பச்சிளம் குழந்தையுடன் உறவுக்காரப் பெண்ணை கண்ணீருடன் தவிக்கவிட்ட மன்மத இராணுவ வீரர் மதன்குமார் இவர்தான்..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கிருஷ்ணபுரம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் அஞ்சலி தம்பதியினரின் இளைய மகன் மதன்குமார். இவர் கடந்த 6 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றார். இவருக்கும் ஏந்தும்வாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த உறவுக்கார பெண்ணை 5 வருடமாக காதலித்து வந்ததாகவும், சென்னை தனியார் கம்பெனில் பணிபுரிந்து வந்த அந்த பெண்ணை சந்தித்த ராணுவ வீரர் மதன்குமார், கடந்த ஆண்டு ஜூன் மாதம் விடுமுறையில் வந்தபோது திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அத்துமீறியதாகவும் கூறப்படுகின்றது.

மதன்குமார் பாதுகாப்பு பணிக்காக ஐதராபாத்துக்குச் சென்றுவிட்ட நிலையில், கர்ப்பிணியான அந்தப்பெண், 6மாதம் வரையில் வீட்டில் யாருக்கும் தெரிவிக்காமல் மறைத்துள்ளார். இடையில் வயிற்றுவலி என்று கூறி அவதிப்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தபோது தங்கள் மகள் திருமணமாகாமல் கர்ப்பிணியானது அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போதும் தன்னால் தனது மாமாவுக்கு கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்று கர்ப்பத்துக்கு யார் காரணம் என்று சொல்லாமல் மறைத்த இளம்பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாமா மதன்குமாரிடம் செல்போனில் கெஞ்சி உள்ளார். ஆனால் அவரோ தனக்கு ஏற்கனவே 5 காதலிகள் இருப்பதாக கூறி அதில் ஒரு காதலியை வைத்து அந்தப்பெண்ணை மிரட்டியதாக கூறப்படுகின்றது

மதன் குமார் திருமணம் செய்யாமல் கழற்றிவிட்ட நிலையில் அந்தப்பெண்ணுக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை சில மணி நேரத்தில் உயிரிழந்தது. இனி தனது வாழ்க்கையே அந்த குழந்தைதான் என்று இருந்த நேரத்தில் அதுவும் இறந்து போனதால் வேதனையில் கதறித் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் அந்த அபலைப்பெண்.

இளம்பெண் அளித்த புகாரின் பேரில் ஆரணி அனைத்து மகளிர் போலீசார், மதன்குமார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஐதராபாத்தில் பணிபுரியும் மதன்குமாருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். தலைமறைவான மதன்குமாரின் தந்தை ரமேஷ் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

உறவுக்காரரோ, காதலனோ காதலில் எல்லை மீற அனுமதித்தால் என்ன மாதிரியான விபரீதம் அரங்கேறும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments