சக்தி வாய்ந்த நாட்டு வெடிகள் தயாரித்ததால் நிகழ்ந்த வெடி விபத்தில் கருகிய உயிர்கள்... கோவில் விழா அவசரத்தால் விபரீதம்..!
காஞ்சிபுரம் குருவிமலை பகுதியில் பட்டாசு ஆலை குடோன் வெடித்து 10 பேர் கருகி பலியான நிலையில் 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏகாம்பரேஸ்வரர் கோவில் விழாவுக்காக வேகவேகமாக நாட்டுவெடிகள் கொண்டு பட்டாசு தயாரித்த போது நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி..
காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லைக்குடபட்ட குருவிமலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தால் வானுயர எழுந்த பட்டாசு புகை மண்டலம் தான் இது..!
காஞ்சியில் உள்ள நரேன் கிராக்கர்ஸ் என்ற பட்டாசு ஆலையுடன் கூடிய குடோனில் கோவில் திருவிழாவுக்காக நாட்டு வெடிகளால் பல வண்ண பட்டாசுகள் செய்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகின்றது. அந்தவகையில் ஏகாம்பரேஸ்வரர் கோவில் திருவிழா வாணவேடிக்கைக்காக விறு விறுப்பாக பட்டாசுகள் தாயாரிக்கப்பட்டு வந்தது. இந்த பணியில் 24 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இங்கு காலை 11 மணி அளவில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தால் அங்கு பணியில் இருந்தவர்கள் உடல் கருகிய நிலையில் தூக்கி வீசப்பட்டனர்.
பலரது உடல் பாகங்கள் துண்டாகி சிதறியது, பட்டாசு வெடித்த சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்து இளைஞர்கள் வெடி வெடித்துக் கொண்டிருக்கும் போதே காயம் அடைந்த பலரை விரைந்து சென்று மீட்டு தூக்கி வந்தனர்
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்க தேவையான பணிகளை மேற்கொண்டனர்
வெடி விபத்தில் சிக்கி கருகிய நிலையில் கிடந்த தொழிலாளி ஒருவர் தண்ணீர் கேட்க, அவர் மீது ஒருவர் தண்ணீர் ஊற்ற சென்ற போது தடுத்த தீயணைப்பு வீரர், குடிக்கவும் தண்ணீர் கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார்
பட்டாசு ஆலை கட்டிடத்திற்கு வெளியே மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு ஒன்றும் வெடி விபத்தில் சிக்கி பலியானது
வெடிவிபத்து நடந்த இடத்தில் இருந்த கட்டிடங்கள் பல தரை மட்டமாக காட்சி அளித்தது.. காயமடைந்தவர்கள் பலர் கருகிய உடலுடன் கதறி அழுதனர்
பட்டாசு ஆலை விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேரும், சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் 4 பேரும் என மொத்தம் இதுவரை 10 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பலத்த காயம் அடைந்தவர்களுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, செங்கல் பட்டு மற்றும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் மேற்கொள்ளப்படுகின்றதா? எனக் கேட்டறிந்தனர். பலியானவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்
இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலை உரிமையாளரான நரேந்திரனின் உறவினரும், பட்டாசு ஆலையை நிர்வாகித்து வந்தவருமான சுரேந்திரன் என்பவரும் உடல் கருகி பலியானார். மகளின் திருமணத்துக்கு பணம் தருவதாக கூறியதால் விடுப்பு கூட எடுக்காமல் வேலைப்பார்த்து வந்த பூபதி என்பவரும் பரிதாபமாக பலியானதாக உறவினர்கள் கதறி அழுதனர்
தீயணைப்புத்துறையினர் நடத்திய விசாரணையில் கவனக்குறைவு காரணமாக இந்த வெடி விபத்து நடந்தது தெரியவந்துள்ளது. வெயிலை காரணம் காட்டி காலை 9 மணிக்கு எல்லாம் பட்டாசு தயாரிக்கும் பணியை முடித்துச்செல்வது ஊழியர்களின் வழக்கம் என்ற நிலையில் ஏகாம்பரேஸ்வரர் கோவில் விழாவுக்கு சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ச்சியாக வெடிக்க கூடிய நாட்டு பட்டாசுகள் தயாரிக்க வேண்டும் என்பதாலும், விழாவுக்கு குறுகிய காலமே இருப்பதாலும் புதன்கிழமை கூடுதல் நேரம் ஊழியர்களை வேலை பார்க்க வைத்ததாக கூறப்படுகின்றது. கூடுதல் பணம் கிடைக்கும் என்பதால் ஊழியர்களும் இடத்தை விட்டு எழுந்திருக்காமல் இருந்தபடியே வேக வேகமாக வெடிகளை தயாரித்து வீசியதாகவும், அப்போது ஒன்றுடன் ஒன்று உராய்ந்து வெடிகள் வெடிக்க ஆரம்பித்ததாக மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
பட்டாசு ஆலைக்கும், குடோனுக்கும், அடுத்த ஆண்டு வரை மாவட்ட ஆட்சியர் மற்றும் தீயணைப்புத்துறையினரிடம் முறையாக உரிமம் பெற்று இருந்தாலும், அனுமதிக்கப்பட்டதை விட சக்தி வாய்ந்த நாட்டு வெடிகளை தயாரித்து வெடி விபத்துக்கு காரணமானதாக வழக்கு பதிந்து பட்டாசு ஆலை உரிமையாளர் நரேந்திரனை போலீசார் கைது செய்தனர்.
Comments