தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல்... முக்கிய அறிவிப்புகள் என்னென்ன...? - முழு விளக்கம்

0 2185
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல்... முக்கிய அறிவிப்புகள் என்னென்ன...? - முழு விளக்கம்

2023-24ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்குவது, நிலப்பதிவு கட்டணம் குறைப்பு, புதிய மினி டைடல் பூங்காக்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-24ஆம் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். முன்னதாக, எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி வழங்காததால் அதிமுக எம்எல்ஏக்கள் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டனர்.

பின்னர் உரையாற்றிய நிதியமைச்சர், ஈரோடு மாவட்டம் அந்தியூர், கோபி பகுதியில் 80,000 ஹெக்டேர் வனப்பரப்பில் 'தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்' என்ற பெயரில் மாநிலத்தின் 18ஆவது வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும் என அறிவித்தார். கோவையில் அவிநாசி சாலை, சத்தி சாலை உள்ளடக்கிய பகுதியில் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலும், மதுரையில் திருமங்கலம், ஒத்தக்கடையை இணைக்கும் வகையில் 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலும் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் ஆண்டில், 621 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணாசாலையில் நான்கு வழி மேம்பாலம் கட்டப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார். 

சேலத்தில் சுமார் 880 கோடி ரூபாய் செலவில் 119 ஏக்கர் நிலப்பரப்பில் மத்திய - மாநில அரசுகளின் நிதியுதவியுடனும் தனியார் தொழில் முனைவோர்களின் பங்களிப்புடனும் புதிய ஜவுளிப் பூங்கா அமைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்தார். மேலும், ஈரோடு, நெல்லை, செங்கல்பட்டில் தலா ஒரு லட்சம் சதுரடி பரப்பளவில் மினி டைட்டல் பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் சென்னை, கோவை, ஓசூரில், TN Tech city எனப்படும் தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிச்சந்தையில் சொத்துகளின் மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதால் 2017ஆம் ஆண்டு வரை கடைபிடிக்கப்பட்டு வந்த நிலத்தின் வழிகாட்டு மதிப்பிற்கு ஈடாக உயர்த்தவும், பதிவுக்கட்டணத்தை 4 சதவீதத்தில் இருந்து 2 சதவிகிதமாக குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைப்பார் என்றும் நிதியமைச்சர் அறிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments