முதல் அமைச்சர் பாதுகாப்பு பணிக்காக, சஃபாரி போட்ட கமாண்டோ பெண் சிங்கங்கள்..!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பளிக்கும் பணியில் மகளிர் கமாண்டோ காவல் படையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
தமிழக காவல் துறையில் மகளிர் பணியமர்த்தபட்டு 50ஆண்டுகால பொன்விழா கொண்டாடப்பட்டு வரும் இவ்வேளையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மெய்காப்பாளராகவும் பெண்கள் கமாண்டோ படையினர் பணியாற்ற தொடங்கியுள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தனி பாதுகாப்பு பிரிவில் காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் தனுஷ் கண்ணகி தலைமையிலான பெண் கமாண்டோ படையினர், சஃபாரி ஷூட்டுடன் கூலர்ஸ் அணிந்து கெத்தாக இந்த பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்வார்பேட்டை வீட்டிலிருந்து புறப்படும் நொடி முதல் அவர் மீண்டும் வீடு திரும்பும் வரை பெண்கள் கமாண்டோ படை ஆண் கமாண்டோக்களின் அதே சுறுசுறுப்புடன் கவனமாக இந்த பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர். இந்த கமாண்டோ படையில் 9 பெண் கமாண்டோ வீராங்கனைகள் இடம் பெற்று உள்ளனர்.
பெண் கமாண்டோக்களுக்கு தினமும் உயர் அதிகாரிகள் மூலம் பாதுகாப்பு நடைமுறை, சிலம்பம் தற்காப்பு உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
ஆயுதப் பயிற்சி, கை துப்பாக்கி, ஏகே-47உள்ளிட்ட உயரக துப்பாக்கிகளின் பயிற்சிகளை பெற்றுள்ளனர். வெடிகுண்டுகளை கையாள்வது, அவற்றை செயலிழக்கச் செய்வது, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பிரித்து மீண்டும் இணைப்பது என பல்வேறு திறன்களையும் இந்த பெண் கமாண்டோ படையினர் ஒருங்கே பெற்றுள்ளனர்.
தமிழக வரலாற்றில் முதன் முதலாக முதலமைச்சர் தனி பாதுகாப்பு பிரிவில் இதுபோன்ற பெண்கள் கமாண்டோ சிறப்பு படை அமைக்கப்பட்டு சஃபாரி உடை மற்றும் தனிச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சிங்கத்தை தலையில் வைக்கும் ஒரு வாய்ப்பு தனக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக உதவி ஆய்வாளர் தனுஷ் கண்ணகி மகிழ்ச்சி தெரிவித்தார்
தன்னம்பிக்கையும், தைரியமும், உடல் வலுவும் இருந்தால் போதும் காவல் துறையில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் பெண்கள் வியத்தகு உயரங்களை எட்ட இயலும்.
Comments