மளிகை கடைக்குள் மங்களகரமாக கிளினிக்.. கைராசி போலி மருத்துவர் கைது..! எடுபடாமல் போன இருமல் நாடகம்

0 4693

மளிகைக்கடைக்குள் வைத்து ஆங்கில மருத்துவம் பார்த்த போலி பெண் மருத்துவரை கையும் களவுமாக சுகாதாரத்துறை அதிகாரிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.10 வகுப்பு மட்டுமே படித்த கைராசி மருத்துவர் கம்பி எண்ணும் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு

தர்மபுரி மாவட்டத்தில் அதிக அளவில் போலி மருத்துவர்கள் உள்ளதாகவும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மருத்துவ சுகாதாரத்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வெங்கட சமுத்திரம் கிராமத்தில் மளிகைகடை நடத்தி வரும் தேவி என்ற பெண் காய்ச்சல் என்று வரும் நோயாளிகளுக்கு ஊசி போடுதல், மாத்திரை வழங்குவது என்று அந்த பகுதியில் கைராசி மருத்துவராக இருந்ததாக கூறப்படுகின்றது.

அண்மைக்காலமாக கட்டணத்தை உயர்த்திய தேவியின் சட்டவிரோத சிகிச்சை குறித்தும், தங்கள் பகுதியில் வைரஸ் காய்ச்சல் பரவுவது குறித்தும் தர்மபுரி மாவட்ட சுகாதாரத்துறைக்கு ஏராளமாக புகார்கள் சென்றுள்ளன. மருத்துவ இணை இயக்குனர் சாந்தி நேரடியாக கடைக்குள் புகுந்து ஆய்வு செய்து போலி மருத்துவரின் வீட்டுக்கே சென்று கையும் களவுமாக பிடித்தார்.

அப்போது போலி மருத்துவர் தேவியின் வீட்டிலிருந்து ஊசி, மருந்து மாத்திரைகள், ஸ்டெத்தஸ்கோப், நெபுலேசர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை கைப்பற்றினர்.

அவரை வெளியே அழைத்த போது தனக்கு இருமல் இருப்பதாக கூறி தேவி திடீரென நாடகமாடினார்

இந்த நடிப்பெல்லாம் சிவாஜியின் தங்கை சாவித்திரி காலத்திலேயே பார்த்தாச்சி.. என்ற பாணியில், மாத்திரையை போட்டுகிட்டு வாம்மா என்று அழைத்தார் மருத்துவ இணை இயக்குனர் சாந்தி

தனது நடிப்பு நமத்துப்போனதால் வேறு வழியின்றி வெளியே வந்தார் போலி மருத்துவர் தேவி. அவரை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு பெண் காவலர் ஒருவர் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச்சென்றார்.

போலி மருத்துவர் தேவியை செய்தியாளர்கள் படம் பிடிப்பதை பார்த்ததும் அவரது ஆதரவாளர் தங்களிடம் தேவையான சான்றுகள் இருப்பதாக ஆவேசமாக கூறிச்சென்றார்.

விசாரணையில் 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள தேவி இளம் பருவத்தில் சில மருத்துவர்களிடம் எடுபிடி வேலைகளை செய்து வந்ததாகவும்,அதன் மூலம் மருந்துகள் குறித்து தெரிந்து கொண்டு தனது மளிகை கடைக்குள்ளேயே ஒரு கிளினிக்கை திறந்து வைத்து காசு பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

போலி மருத்துவர் தேவியின் மீது வழக்கு பதிவு செய்த பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஊருக்கெல்லாம் நாடி பிடித்து ஊசி போட்ட கைராசி மருத்துவர் தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

இது போல மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தீவிர ஆய்வு நடத்தி போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்யவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments