பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டணமில்லா கழிப்பிடத்தில் கூலிக்கு ஆள் போட்டு வசூல்..! மாதம் ரூ.30 ஆயிரம் சும்மா கிடைக்குதாம்

0 2113

சென்னை மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள கட்டணமில்லா இலவச கழிப்பிடங்களில் தனியாக ஆள் போட்டு கட்டணம் வசூலிக்கும் கும்பல், முக்கியமான இடங்களில் உள்ள கழிப்பிடங்கள் மூலம் தினமும் ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிப்பது அம்பலமாகி உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப போதுமான பொது கழிப்பிட வசதி இல்லை என்பதால் கூடுதலாக கழிவறைகளை கட்டமைக்கவும், அதனை முறையாக பராமரிக்க, பராமரிப்பு பணியினை தனியாருக்கு வழங்கவும் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. 200 வார்டுகளில் மொத்தம் 807 கட்டணமில்லா இலவச கழிவறைகள் பயன்பாட்டில் உள்ளன.

பொது கழிப்பிட வசதியை பொதுமக்களுக்கு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இலவசமாக வழங்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், கழிவறைகளை பராமரிப்பதற்கு தனியாருக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறி சிலர், பொதுமக்களிடம் 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை என கட்டணம் வசூலித்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகம் ரிப்பன் மாளிகை வளாகத்தை ஒட்டியுள்ள சாலைகளில் இருக்கும் இரு கழிவறைகளிலேயே இலவச பொது கழிப்பிடத்திற்கு தனிநபர்களால் கூலிக்கு ஆள் போட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவது வீடியோக்கள் மூலம் அம்பலமாகி உள்ளது.

கட்டணம் வசூலிக்கும் நபரிடம் இது குறித்து கேட்டால் மோகன் என்பவர் ஒப்பந்தம் எடுத்திருப்பதாகவும், அவர் தான் தன்னை வசூலிக்க நியமித்திருப்பதாகவும் , நாளொன்றுக்கு 800 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை வசூலாவதாக கூறினார்.

கட்டணமில்லா கழிவறை ஒன்றுக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் அளவுக்கு நிதி ஒதுக்கி மாநகராட்சி பராமரித்து வரும் நிலையில், மர்மகும்பல் ஒரு கழிப்பிடத்துக்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வசூலிப்பதாக கூறப்படுகின்றது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, இதுவரை மாநகராட்சி தனியாருக்கு கழிப்பிடங்களை பராமரிக்கும் பணிக்கு ஒப்பந்தம் வழங்கவில்லை எனவும், வருங்காலத்தில் அதுபோல் ஒப்பந்தம் வழங்கினாலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கழிப்பிடங்கள் இலவசமாக தான் இருக்கும் என்றும் தெரிவித்தனர்.

சென்னையில் கழிப்பிடங்களின் முகப்பில் இலவச கழிப்பிடம் என பெரிய அளவில் எழுதுவதும், கட்டணம் வசூலிக்கும் சமூக விரோதிகள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுப்பதும் தான் இந்த மர்ம கும்பலின் வசூல் வேட்டையை தடுக்க உதவும் என்கின்றனர் மக்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments