பேராசிரியை தலையில் தாக்கி தரதரவென இழுத்துச்சென்ற வழிப்பறி கொள்ளையன்.. திருச்சியில் அரங்கேறிய கொடுமை..!
திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் நடைப்பயிற்சி சென்ற பேராசிரியையின் தலையில் உருட்டு கட்டையால் தாக்கி மயங்கி விழுந்தவுடன் அவரது கால்களை பிடித்து தர தரவென இழுத்துச்சென்ற சம்பவம் தொடர்பான உருட்டு கட்டைவெளியாகி உள்ளது
திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள சாலையோர பூங்கா ஒன்றில் பெண் ஒருவரை மாஸ்க் அணிந்த மர்ம நபர் தர தர வென இழுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலனது
அந்த பெண்ணுக்கு என்னவானது, இழுத்துச்செல்லும் நபர் யார் என்று விசாரித்த போது மது போதையில் பட்ட பகலில் அரங்கேறிய வழிப்பறி சம்பவம் அம்பலமானது
திருச்சி மத்திய பேருந்து நிலைய பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி சீதாலட்சுமி , பாரதிதாசன் பல்கலைகழகத்தில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகின்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் சீதாலட்சுமி, வழக்கமாக நடைபயிற்சிக்கு செல்லும் கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள வெஸ்லி தனியார் பள்ளி மைதானத்துக்கு நடை பயிற்சி மேற்கொள்ள தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அங்கு இவர் செல்போனில் பேசிய படியே நடை பயிற்சி மேற்கொண்ட போது, அங்கு வந்த போதை ஆசாமி ஒருவன் பேராசிரியை சீதாலட்சுமியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவனை கண்டு கொள்ளாமல் சீதாலட்சுமி நடைபயிற்சியில் கவனம் செலுத்திய போது, திடீரென அவரது பின்னந்தலையில் அங்குகிடந்த கட்டையால் தாக்கி உள்ளான்.
மயங்கிச்சரிந்ததும் அவரது கால்களை பிடித்து தரதரவென இழுத்துச்சென்று புதர் மறைவில் போட்ட போதை ஆசாமி, அவரது செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு சென்று விட்டதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் பள்ளி வளாகத்தில் நடந்ததால் அருகில் பரபரப்பாக இயங்கும் சாலை இருந்தும் யாரும் கவனிக்கவில்லை, ஆனால் சாலையில் மறுபுறம் இருந்த துணிகடை ஒன்றின் மேல் தளத்தில் இருந்த ஊழியர் ஒருவர்
பார்த்து வீடியோ எடுத்துள்ளார்.
உடனடியாக அந்த இளைஞர் காவல் கட்டுப்பட்டு அறைக்கு தகவலையும் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சீதாலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக சேர்த்த நிலையில், அவரை தாக்கி விட்டு தப்பிச்சென்ற போதை ஆசாமியை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
போலீசில் சிக்காமல் இருக்க சீதாலட்சுமியின் வாகனத்தில் அதிவேகத்தில் தப்பிச்சென்ற கொள்ளையன் சாலை தடுப்பில் மோதி கீழே விழுந்ததில் கால் முறிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கண்டோன்மெண்ட் காவல் நிலைய போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைதான கொள்ளையன் தனது வாக்குமூலத்தில், பணம் கொடுத்திருந்தால் தான் சென்றிருப்பேன் எனவும் ஆனால் அவர் தன்னை கண்டுகொள்ளாமல் சென்ற ஆத்திரத்தில் தாக்கி தரதரவென இழுத்துச் சென்று வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளான்.
திருக்காட்டுபள்ளியை சேர்ந்த செந்தில்குமார் என்ற அந்த கொள்ளையன் காந்தி மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்துள்ளான். ஏற்கனவே போதையில் இருந்த அவன் கூடுதல் போதையேற்ற வேண்டும் என்பதற்காக பேராசிரியை மீது தாக்குதல் நடத்தி வழிப்பறியில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்
நடைப்பயிற்சிக்கு செல்லும் பெண்கள் கூடுமானவரை ஜன நடமாட்டம் உள்ள பூங்கா மற்றும் விளையாட்டு திடல்களுக்கு செல்வதோடு, தங்களை யாராவது பின் தொடர்கிறார்களா ? என்றும் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டியது அவசியம் என்பதற்கு இந்த சம்பவமே சான்று.
Comments