கோவிலில் கடை போடுவதில் ஏற்பட்ட தகராறில், விவசாயியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த ரவுடி..!
திருச்சி அருகே கடை போடுவதில் ஏற்பட்ட தகராறில் விவசாயியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர்.
கீழதேவதானம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தனபால். இவரது மனைவி வன்னியாயி அங்குள்ள பைரவர் கோவிலுக்கு வெளியே கடை அமைத்து விளக்கு விற்பனை செய்து வருகிறார்.
அதே பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்பவரும் விளக்கு விற்பனை செய்து வரும் நிலையில், கோவிலில் யார் முதலில் கடை போடுவது என நேற்று இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் வன்னியாயியின் உறவினரான மணிமாறன் தாக்கியதில், மஞ்சுளாவின் கணவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
தந்தை தாக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த மஞ்சுளாவின் மகன் அருண் பிரசாத், நேற்றிரவு மணிமாறனை பழிவாங்குவதற்காக அரிவாளுடன் சென்றுள்ளார்.
அப்போது வீட்டிலிருந்த வன்னியாயி கணவர் தனபாலை, அருண் பிரசாத் சரமாரியாக வெட்டியதில், மார்பு, வயிற்று பகுதியில் பலத்த காயமடைந்த தனபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Comments