நாளை காலை 10 மணி வரை இம்ரான் கானை கைது செய்ய லாகூர் உயர்நீதிமன்றம் தடை
இம்ரான்கான் ஆதரவாளர்களுக்கும், பாகிஸ்தான் போலீசாருக்கும் 2 நாட்களாக கடும் மோதல் வெடித்த நிலையில், நாளை காலை 10 மணி வரை அவரை கைது செய்ய லாகூர் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இம்ரான் கான், பிரதமராக பதவி வகித்தபோது பெற்ற பரிசுப்பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல், கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்ற குற்றச்சாட்டில் அவரை கைது செய்ய இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இம்ரான் கான் இல்லத்தில் திரண்ட ஆதரவாளர்கள், கைது செய்யவந்த போலீசார் மீது கற்களை வீசி தாக்கியதுடன், போலீஸ் வாகனங்களையும் தீயிட்டு கொளுத்தினர். பதிலுக்கு போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
தனது வீட்டு வளாகத்திற்குள் வீசப்பட்ட கண்ணீர் புகை குண்டுகளை மேஜையில் வைத்தப்படி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இம்ரான் கான், பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் தன்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
நாளை காலை வரை இம்ரான் கானை கைது செய்ய உயர் நீதிமன்றம் தடை விதித்ததால், போலீசாரும், துணை ராணுவத்தினரும் அங்கிருந்து புறப்பட்டனர். கேஸ் மாஸ்க் அணிந்தபடி வெளிப்பட்ட இம்ரான் கான் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
Comments