எங்க கடைக்கு சீல் வச்சிப்பாரு.. வியாபாரியின் பெட்ரோல் குளியலால் மிரண்ட அதிகாரிகள்...!
சத்தியமங்கலம் அருகே புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் மளிகை கடைக்கு சீல் வைக்க வந்த அதிகாரிகளை கண்டித்து கடை உரிமையாளர் தனது தலையில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் சீல் வைக்க வந்தவர்கள் மிரண்டு ஓடிய சம்பவம் அரங்கேறி உள்ளது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 100 க் கும் மேற்பட்ட கடைகள் உள்ளது.
இதில் தினசரி சந்தையை ஜோதி கமலம் என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த நிலையில் 5 லட்சம் ரூபாய் அளவிற்கு வாடகை நிலுவைத் தொகை உள்ளதாக கூறி அவரது கணவர் ரவிச்சந்திரன் நடத்தி வரும் நகராட்சிக்கு சொந்தமான மளிகை கடைக்கு சீல் வைக்க நகராட்சி அதிகாரிகள் சென்றுள்ளனர்.
தினசரி சந்தைக்கு செலுத்த வேண்டிய வாடகை நிலுவைத் தொகை உள்ளதால் மளிகை கடையை பூட்டி சீல் வைக்கப் போகிறோம் என கூறியுள்ளனர்.
அப்போது தனது பெயரில் உள்ள கடைக்கு முறையாக தான் வாடகை செலுத்தி வருவதாக தெரிவித்த ரவிச்சந்திரன், தினசரி சந்தை நிலுவை பாக்கி தொகைக்கும் இந்த கடைக்கும் சம்பந்தம் இல்லை என்று வாதிட்டதோடு, முன் அறிவிப்பு நோட்டீஸ் தராமல் எப்படி சீல் வைக்க முடியும் ? என்று கேள்வி எழுப்பினார்
தினசரி சந்தை வாடகை பாக்கி தொகை வைத்துள்ள மனைவி ஜோதி கமலம் பெயரில் உள்ள சொத்துக்களை ஜப்தி செய்ய நோட்டீஸ் வழங்குங்கள். இந்த கடையை சீல் வைக்க அனுமதிக்க மாட்டேன் என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் வியாபாரி ரவிச்சந்திரன்
அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்த சங்க நிர்வாகி ஒருவர் தீக்குளிக்கும் படி விபரீத யோசனையை தெரிவித்ததோடு, மண்ணெண்னையை எடுத்து வரும் படி கூறினார்.
ஆவேசமான ரவிச்சந்திரன் அருகில் நின்ற தனது வண்டியில் இருந்து பெட்ரோலை பிளாஸ்டிக் ஜக்கில் பிடித்து குளிப்பது போல தனது தலையில் ஊற்றியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
சீல் வைக்க வந்த அதிகாரிகள் எங்கே அவர் பற்ற வைத்துகொள்ள போகின்றாரோ என்று விலகி ஓடினர்
அக்கம்பக்கத்து கடையினர் ரவிச்சந்திரனுக்கு ஆதரவாக குரல் எழுப்பியதால், நகராட்சி அதிகாரிகள் கடைக்கு சீல் வைக்காமல் திரும்பிச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நகராட்சி நிலத்தை குத்தகைக்கு எடுத்த ரவிச்சந்திரனின் மனைவி ஜோதி கமலத்தின் பெயரில் முன் அறிவிப்பு நோட்டீஸ் அனுப்பி முறையாக ஜப்தி நடவடிக்கை மேற்கொண்டு இருந்தால் இத்தனை களே பாரங்களுக்கு இடமில்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனர்
Comments