கோவில் சாமி ஊர்வலத்தில் ஜெனரேட்டரில் சிக்கிய தலைமுடி.. 13 வயது சிறுமி பலியான சோகம்..!
காஞ்சிபுரம் அருகே கோவில் திருவிழா சாமி ஊர்வலத்தின் போது, தலைமுடி ஜெனரேட்டரில் சிக்கியதால் 13 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட விச்சாந்தங்கள் கிராமத்தில் சம்பவத்தன்று இரவு அங்காளம்மன் கோயில் திருவிழாவில் மாட்டு வண்டியில் சாமி ஊர்வலம் நடந்து கொண்டிருந்தது. மாட்டு வண்டியின் பின்புறம் வண்ண விளக்குகள் எரிவதற்காக ஜெனரேட்டர் பொருத்தப்பட்டிருந்தது.
மாட்டு வண்டியின் பின் புறம் இருந்த ஜெனரேட்டர் அருகில் அமரும் ஆர்வத்தில் 13 வயது சிறுமியான லாவண்யா என்பவர் எம்பி குதித்து ஏறி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சிறுமியின் தலைமுடி ஜெனரேட்டரில் சிக்கிக்கொண்டது, இதில் தலையில் இருந்த மொத்த முடியையும் மோட்டார் இழுத்து பிய்த்துக் கொண்டதால் பலத்தகாயமடைந்த லாவண்யா சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை அவர் பலனின்றி உயிரிழந்தார். லாவண்யா, தனது தந்தை சரவணன் மற்றும் தாயுடன் உடன் சென்னையில் வசித்து வந்த நிலையில் 4 வருடங்களுக்கு முன்பாக தாய் உயிரிழந்ததால் தனது தாய்வழி பாட்டியான லதாவின் பராமரிப்பில் இந்த கிராமத்தில் வசித்து வந்துள்ளார். 7 ஆம் வகுப்பு படித்து வந்த லாவண்யா, நன்றாக படித்து பல்வேறு பரிசுகளை வென்றவர் என்று தெரிவித்த உறவினர்கள் லாவண்யா பெற்ற பரிசுகளையும் மெடல்களையும் காண்பித்து கலங்கி நின்றனர்
4 வருடங்களுக்கு முன்பாக தனது மகளை இழந்த மூதாட்டி லதா, தற்போது தனது பேத்தியையும் பறிகொடுத்த துக்கத்தால் கதறி அழுதார்
பொதுமக்களும், சிறுவர் சிறுமிகளும் உற்சாகமாக கூடும் திருவிழா நேரத்தில் மின் இணைபுக்காக ஜெனரேட்டரை பயன்படுத்தும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க தவறியாதால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாக கூறப்பட்ட நிலையில் ஜெனரேட்டர் உரிமையாளர் முனியசாமியை போலீசார் கைது செய்துள்ளனர்
அதே நேரத்தில் பெற்றோர்களும் , பெரியவர்களும் சிறுவர் சிறுமிகளை ஜெனரேட்டர் மற்றும் மின்சாதனங்கள் அருகில் செல்லாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம்.
Comments