இர்பான் ரெஸ்டாரண்டில் சாப்பிட்டு கீழே போட்ட எச்சில் எலும்பில் பெப்பர் சிக்கனா ? சல்லடை போட்டு சலித்த அதிகாரிகள்..!

0 25564

பிரியாணி பிரியர்கள் சாப்பிட்டு போட்ட,  சிக்கன் எலும்பை, பெப்பர் சிக்கனில் கலந்து தருவதாக வீடியோ வெளியிட்ட யூடியூப்பரின் புகாரின் பேரில், புதுச்சேரி அடுத்த சுல்தான்பேட்டையில் உள்ள இர்பான் ரெஸ்டாராண்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்....

கண்டதையும் உண்டு மகிழும் யூடியூப்பர்களால் நெய் புரோட்டாவுக்கு பேமஸ் என்று உச்சத்துக்கு தூக்கிவிடப்பட்ட பிரபலமான உணவகம், புதுச்சேரி அடுத்த வில்லியனூர் சுல்தான்பேட்டையில் அமைந்துள்ள இர்பான் ரெஸ்டாரண்ட்!

இன்று அதே போன்ற ஒரு யூடியூப்பரால் இர்பான் ரெஸ்டாரண்டில், கெட்ட இறைச்சி, சாப்பிட்ட எலும்பு துண்டுகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளதா ? என்று உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள்  சல்லடை போட்டு சலித்து சென்றுள்ளனர்

இரு தினங்களுக்கு முன்பு புதுச்சேரியை சேர்ந்த யூடியூப்பர் ஒருவர் இந்த கடைக்கு நெய் புரோட்டா சாப்பிடச்சென்றுள்ளார். சைடிஸ்ஸாக பெப்பர் சிக்கன் ஆர்டர் செய்து காத்திருந்த நிலையில் குளிர்ந்த நிலையில் பெப்பர் சிக்கனை கொண்டு வந்து அவருக்கு சாப்பிட கொடுத்துள்ளனர். அந்த பெப்பர் சிக்கனில் பிரியாணி ரைஸ் ஒட்டிய நிலையில் எலும்பு துண்டு ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பிரியாணி சாப்பிட்டவர்கள் போட்டுச்சென்ற எச்சில் எலும்பில் பெப்பர் சிக்கன் தயாரிக்கப்படுகின்றதா ? என்று கேட்டு கடையின் மாஸ்டரிடம் அவர் வாக்குவாதம் செய்தார்.

மாஸ்டரோ, தங்கள் கடையில் கூட்டம் அதிகமாக வரும் என்பதால் முன் கூட்டியே பெப்பர் சிக்கன் தயார் செய்து வைத்து அதனை எடுத்து கொடுப்பதால், அப்படி இருக்கின்றது என்று கூறி சமாளித்தார்.

இதையடுத்து இர்பான் ரெஸ்டாரண்ட் உரிமையாளர், தனக்கு உரிய பதில் தரவில்லை என்று அந்த யூடியூப்பர் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றையும் பகிர்ந்தார்.

இந்த நிலையில் இர்பான் ரெஸ்டாரண்டிற்கு சென்ற புதுச்சேரி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். போதிய பராமரிப்பில்லாமல் காணப்பட்ட சமையல் கூடத்தில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை ஒவ்வொன்றாக ஆய்வு செய்தனர்.

கெட்டுபோயிருந்த தக்காளி சாஸ் பாட்டிலை எடுத்து கீழே கொட்டச்செய்தனர்.

அங்கு வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதற்காக வேக வைத்து தயார் செய்யப்பட்டிருந்த சிக்கனை எடுத்து ஆய்வு செய்தனர். பரோட்டாவை எடுத்து சோதித்து பார்த்தனர். பெரிய அளவில் எந்த ஒரு கெட்டுபோன பொருட்களும் அங்கு சிக்கவில்லை . வாடிக்கையாளர்களுக்கு தரமான உணவுகளை வழங்குமாறும், எப்போது வேண்டுமானாலும் மீண்டும் சோதனைக்கு வருவோம் என்று அறிவுறுத்திச்சென்றனர்.

கடையில் இருந்து வெளியில் வந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகளை மடக்கிய குடிமகன் ஒருவர், முன்பெல்லாம் 100 ரூபாய்க்கு 10 புரோட்டா கொடுத்ததாகவும் தற்போது 5 புரோட்டாதான் தருகின்றனர் என்றும் விலை உயர்வை விரக்தியோடு புகாராக தெரிவித்தார்.

தங்களின் உணவகத்தை தேடி வரும் வாடிக்கையாளர்களுக்கு தரமான உணவை கொடுத்தால், இது போன்ற விபரீத சர்ச்சைகள் உருவாகாது என்கின்றனர் அதிகாரிகள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments