சிலிகான் வேலி வங்கி திடீரென திவாலானது ஏன்?

0 2669

அமெரிக்காவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் ஆதரவுடன் நடத்தப்பட்ட சிலிகான் வேலி வங்கி திடீரென திவாலானது ஏன்? என்பது குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு...

1983ல் தொடங்கப்பட்ட சிலிகான் வேலி வங்கி திவாலாவதற்கு முன் அமெரிக்காவின் 16வது பெரிய வணிக வங்கியாகத் திகழ்ந்தது. உலகின் பல்வேறு நாடுகளில் கிளைகளைப் பரப்பியிருந்த இந்த வங்கி தனது பங்கில் பாதிக்கும் மேல் கடன் தொகைகளாக வழங்கியது. நிதி நிலை அறிக்கையின் படி, 2019ம் ஆண்டில் 71 பில்லியன் டாலராக இருந்த சிலிகான் வங்கியின் சொத்து மதிப்பு 2022ல் 220 பில்லியன் டாலராக உயர்ந்தது.

ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பணத்துடன், சிலிக்கான்வேலி வங்கி ஒரு வருடத்திற்கு முன்பே அதிக அளவு பத்திரங்களை வாங்கியது. மற்ற வங்கிகளைப் போலவே, சிலிக்கான் வேலி வங்கியும் டெபாசிட்களில் ஒரு சிறிய தொகையை கையில் வைத்திருந்து, மீதியை வருமானம் ஈட்டும் நம்பிக்கையுடன் முதலீடு செய்தது. இந்த நிலையில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெடரல் ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு வட்டி விகிதத்தை உயர்த்தியதும், சிலிகான் வங்கியின் பத்திரங்களின் விலை குறைந்தது.

இதனால் சிலிகான் வங்கி தனது முதலீடுகளை குறைந்த மதிப்பில் விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கடனை அடைப்பதற்காக 2.25 பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய பங்குகளை விற்பனை செய்யப் போவதாக வங்கி வெளியிட்ட அறிவிப்பு, வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் கடந்த புதன்கிழமையன்று அந்த வங்கி கிட்டத்தட்ட 2 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பைச் சந்தித்தது. வங்கியின் பங்குகள் 60 விழுக்காடு சரிந்தன.

இதன் எதிரொலியாக சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கி மற்றும் நியூயார்க்கில் உள்ள சிக்னேச்சர் வங்கியின் பங்குகள் வெள்ளிக்கிழமையன்று 20 விழுக்காட்டிற்க்கும் அதிகமாக வீழ்ச்சி கண்டன. இதனால் புதிய துணிகர நிதியைத் திரட்டுவது வங்கிகளுக்கு சவாலாக இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று சிலிகான்வேலி வங்கியின் வர்த்தகம் நிறுத்தப்பட்டு திவால் நிலைக்குத் தள்ளப்பட்டது.

இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தங்கள் வங்கி அமைப்பு பாதுகாப்பானது என்பதில் உறுதியாக இருப்பதாகவும், தேவையானதைச் செய்வதாகவும் உறுதி அளித்துள்ளார். ஏனைய தரவுகளின் படி சிலிகான்வேலி வங்கி சரிவைத் தடுக்க, தகுதியான நிதி நிறுவனங்களுக்கு கூடுதல் நிதி கிடைக்கச் செய்ய வேண்டும் என பெடரல் வங்கி தெரிவித்துள்ளது. அப்படிச் செய்தால்தான் சிலிகான்வேலி வங்கி மீண்டு வர வாய்ப்புள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments