செலுத்திய பணத்திற்கு ரசீது தர மறுத்து அடாவடி செய்த நகராட்சி ஊழியர்கள்.. ரசீது கேட்டது குத்தமா போயிடுச்சா ?
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியில் இலவச ஆதார் பதிவு சேவைக்கு பெறப்பட்ட பணத்திற்கு ரசீது கேட்ட இளைஞரை அலுவலக ஊழியர்கள் தாக்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியில் செயல்பட்டு வரும் ஆதார் நிரந்தர பதிவு மையத்தில் புதிய ஆதார் கார்டுக்கு விண்ணப்பிப்பது, பெயர், முகவரி மாற்றம் மற்றும் கைரேகை பதிவு போன்ற சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காரைக்குடி அடுத்த பலவான்குடியைச் சேர்ந்த ஹரி என்ற இளைஞர் தனது தங்கையை கட்டாய ஆதார் பதிவிற்காக நகராட்சி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். கைரேகை மற்றும் கருவிழி பதிவு முடிந்தவுடன் பணியில் இருந்த தற்காலிக பெண் ஊழியர் சண்முகப்பிரியா என்பவர் 120 ரூபாய் பெற்றுள்ளார். பணம் கட்டியதும் அதற்கான ரசீதை அவரிடம் வழங்காமல் சண்முகப்பிரியாவே தனது ஹேண்ட் பேக்கில் வைத்துக் கொண்டதாக கூறப்படுகின்றது
காலை 11 மணிக்கு ரசீது கேட்டவரை மதியம் சுமார் 1.30 மணி வரை காத்திருக்க வைத்த நிலையில், ஹரி தனது செல்போன் கேமராவை ஆன் செய்துக் கொண்டே ஹேண்ட்பேக்கில் உள்ள ரசீதை எடுக்கச் சென்றுள்ளார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்படவே அங்கு வந்த கோகுல் என்ற ஊழியர் ஹரியை தாக்கவும், அவரிடமிருந்த செல்போனை சண்முகப்பிரியா பறித்துக் கொண்டார்.
தாக்குதல் சம்பவத்தை கண்டதும் ,அங்கிருந்த பொதுமக்கள் ஹரிக்கு ஆதரவாக பேசவே அவரை வெளியே அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஹரி, வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து அங்கு வந்த போலீசார், ஊழியர் சண்முகப்பிரியா மறைத்து வைத்திருந்த ரசீதை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இளைஞர் தாக்கப்பட்டது குறித்தும், அங்குள்ள ஊழியர்கள் பொதுமக்களுக்கு உரிய ரெஸ்பான்ஸ் அளிப்பது இல்லை என்றும் சம்பவத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர் ஆதங்கம் தெரிவித்தார்
Comments