மூன்று பெயர்களுடன் 33 வருட இசைப்பயணம்.. மெலடிக்கு கிடைக்காத ஆஸ்கர்..! கொண்டாட்டப் பாடல் கொத்தி தூக்கியது..
எஸ்.எஸ். ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காக இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி ஆஸ்கர் விருது வென்றுள்ளார். வேறு வேறு பெயர்களில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் அறிமுகமானவரின் விருது வேட்டை குறித்து விவரிக்கின்றது இந்த செய்திதொகுப்பு..
1990 ஆம் ஆண்டு தெலுங்கு திரை உலகில் அறிமுகமானாலும், 1991 ஆம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அழகன் படம் மூலம் மரகதமணி என்ற பெயரில் தமிழில் அறிமுகமானவர் எம்.எம். கீரவாணி
அழகன் படத்தில் சிறந்த இசைக்காக தமிழக அரசின் விருதை முதல் தமிழ் படத்திலேயே வென்றார் கீரவாணி
90 களில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பெரும்பாலான தெலுங்கு படங்களில் கீரவாணியின் இசை ரசிகர்களை கவர்ந்தது
1997 ஆம் ஆண்டு நாகர் ஜூனா நடித்த அன்னமயா என்ற படத்திற்காக மனம் உருகும் பக்தி பாடல்களுக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றார் எம்.எம்.கீரவானி
தெலுங்கில் எம்.எம்.கீரவாணி, தமிழில் மரகதமணி, இந்தியில் எம்.எம். க்ரீம் என்ற மூன்று பெயர்களில் 33 வருடங்களாக ஏராளமான விருதுகளை பெற்றிருந்தாலும், எஸ்.எஸ். ராஜமவுலியின் பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் கீரவாணியின் இசையை ஒரே நேரத்தில் இந்தியா முழுமைக்கும் பறை சாற்றியது
ஆர்.ஆர்.ஆர் படத்தில் பின்னணி இசைக்கு இணையாக பாடல்களிலும் இசையால் மிரட்டி இருந்தார் எம்.எம்.கீரவாணி. குறிப்பாக நாட்டு நாட்டு பாடலுக்கு அவர் அமைத்து இருந்த மெட்டும், பாட்டும் , அதிரும் இசையும் அதில் இடம்பெற்ற நடனமும் ரசிகர்களை உலக அளவில் கொண்டாட வைத்தது.
இந்த பாடலுக்காக கோல்டன் குளோப் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விருதுகளை குவித்த கீரவாணிக்கு உச்சமாக ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. பாடலாசிரியர் சந்திரபோஸுவுக்கு இந்த விருது பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது
மெலடி பாடல்களால் திரையுலகில் கோலோச்சிய எம்.எம்.கீரவாணிக்கு கொண்டாட்டப்பாடல் ஒன்று ஆஸ்கர் விருதை பெற்று தந்திருப்பது குறிப்பிடதக்கது.
Comments