இரு யானை குட்டிகளையும் எங்ககிட்ட இருந்து பிரிச்சிட்டாங்க.. போட்டோவுக்கு எப்படி போஸ் கொடுப்பது ? ஆஸ்கர் விருதால் அம்பலமான உண்மை..!
ஆஸ்கர் விருது வென்ற the elephant whisperer என்ற ஆவணப் படத்தில் இடம் பெற்ற ரகு, பொம்மி என இரு குட்டியானைகளை பாசமாய் வளர்த்த பாகனின் மனைவி பெள்ளிஅம்மாள் , கடந்த ஒன்றரை வருடமாக வனத்துறையினர் தன்னை யானை குட்டியிடம் நெருங்கவிடவில்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்...
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை யானைகள் வளர்ப்பு முகாம் ஆசியாவின் மிக பழமையான யானைகள் முகாம் ஆகும். இந்த முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பாராமரிக்கப்பட்டு வருகின்றன. தாயை பிரிந்த ரகு, பொம்மி என்ற இரு குட்டி யானைகளை பழங்குடியினர்களான பொம்மன், பெள்ளிஅம்மாள் என்ற பாகன் தம்பதியினர் வளர்த்து வந்தனர். இந்த இரு குட்டி யானைகளுக்கும் , பாகன்களுக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பை மையமாக வைத்து கடந்த 2019ஆம் ஆண்டு உதகையில் பயின்று வந்த கார்த்திக் கொன்சால்வஸ் என்ற பெண்மணி தி எலிபெண்ட் விஸ்பர்ரர்ஸ் என்ற ஆவணப்படத்தை இயக்கினார். youtube மற்றும் Net Flix OTT தளத்தில் வெளியிட்ட இந்த ஆவண திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கும் அனுப்பப்பட்டது,
இப்படம் சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளதால், குட்டி யானைகளை பராமரித்து வந்த பொம்மன், பெள்ளி ஆகியோருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் வனத்துறையினரின் ஏற்பட்டின் பேரில் , யானை குட்டிகளுடன் நிற்க வைத்து பெள்ளி அம்மாளை செய்தியாளர்கள் படம் எடுத்தனர். அப்போது பொம்மி என்ற யானை குட்டியின் அருகில் நின்ற பெள்ளிஅம்மாள், பேச இயலாமல் அழுது கொண்டே விலகிச்சென்றார்..
எதற்காக பெள்ளி அம்மாள் விலகிச்சென்றார்? என்று விசாரித்தபோது, பெள்ளி அம்மாளிடம் இருந்து இரு யானை குட்டிகளையும் வனத்துறை அதிகாரிகள் பிரித்து கூண்டில் அடைத்து வைத்திருப்பதாகவும், கடந்த ஒன்றரை வருடங்களாக தன்னை அந்த யானை குட்டிகளிடம் நெருங்க கூட அனுமதிக்கவில்லை என்றும் இன்று மட்டும் கூப்பிட்டு விட்டு பக்கத்தில் நிற்க சொன்னா எப்படி? என்று பெள்ளி அம்மாள் வேதனையை பகிர்ந்தார்...
நாய்கள் கடித்து கடுமையான காயம் மற்றும் புண்களுடன் தன் கைக்கு வந்த ரகு என்ற யானை குட்டியை நன்றாக பராமரித்து வளர்த்துக் கொடுத்ததாகவும், பொம்மிக்கு தன் சொந்த செலவில் பந்து வாங்கிக் கொடுத்து விளையாட வைத்து குழந்தை போல பார்த்துக் கொண்டதாகவும், யானையுடனான தங்கள் பாசப்பிணைப்பை தெரிவித்தார் பெள்ளி அம்மாள்
தன் மகள் தலையில் காயம் பட்டு அவதி பட்ட போதும், அவர் உயிரிழந்த போதும் கூட அவர்களை பார்க்க செல்லாமல் யானை குட்டிகளே கதி என்று கிடந்த தன்னை யானை குட்டிகளை தொடக்கூடாது என்று சொல்லி பிரித்து அனுப்பினால் எப்படி? என்று கேள்வி எழுப்பிய பெள்ளி அம்மாள், மூன்று வருஷம் வளர்த்து தருகிறேன் என்று தானே கூறினேன் அதற்கு கூட அனுமதிக்கவில்லையே... நானும் ஒரு அம்மா தானே என்று தெரிவித்தார்..
பெள்ளி அம்மாள் அதீத பாசம் காட்டி யானைகுட்டிகளை வளர்ப்பதால் மற்ற பாகன்களிடம் யானைகள் பழகுவதற்கு தயங்குவதால் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக அவரை வனத்துறை பணியில் இருந்து விடுவித்து அனுப்பியதாகவும், அதேபோல அவரது கணவர் பொம்மனை ரகு யானையிடம் இருந்து பிரித்து, வேறு ஒரு யானையை பராமரிக்கும் படி அனுப்பியதாகவும் கூறப்படுகின்றது.
யானை குட்டிகளுடனான தங்கள் பாச பிணைப்பால் இந்திய சினிமாவிற்கு ஆஸ்கர் விருது பெற்றுத்தந்த பொம்மன் மற்றும் பெள்ளி அமமாளை, வனத்துறையினர் பழையபடி யானை குட்டிகளுடன் பழக அனுமதிக்க வேண்டும் என்பதே யானைகள் மீது அன்பு கொண்டோரின் எதிர்பார்ப்பு..
Comments