மெரினா சிவானந்தா சாலையில் சீறிப்பாய்ந்த சொகுசு கார்களை மடக்கிப் பிடித்து அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!
சென்னை மெரினா சாலையில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வேகமாகச் சென்ற சொகுசுக் கார்களை மடக்கிப் பிடித்து போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
மெரினா நேப்பியர் பாலம் அருகே, சிவானந்தா சாலையில், ஃபெராரி, லாம்போகினி, போர்சே உள்ளிட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 8 சொகுசுக் கார்கள் அதிக ஒலியை எழுப்பியபடி வேகமாகச் சென்றுள்ளன.
இதனைக் கண்ட மக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கவே, நேப்பியர் பாலம் அருகே பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் கார்களை மடக்கிப் பிடித்தனர்.
வேகமாக காரை இயக்கியதாகவும் முறையற்ற நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்தியதற்காகவும் தலா 2 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.
முதற்கட்ட விசாரணையில் அடையாறு பகுதியில் உள்ள தனியார் சொகுசு கார் பராமரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக மகாராஷ்டிரா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்த சொகுசுக் கார்கள் என்பது தெரியவந்தது.
இதனிடையே வரிசையாக நின்றிருந்த சொகுசுக் கார்கள் முன்பு நின்று பொதுமக்களில் சிலர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
Comments