கோயிலுக்கு போனோமோ .. சாமி கும்பிட்டோமான்னு இல்லன்னா சிக்கல் தான்..! செல்ஃபி புள்ள பாவங்கள்

0 3479

தாம்பரம் அருகே கோவிலுக்கு செல்லும் திருமணமான பெண்களிடம் நட்பாக பழகி அவர்களுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்டு , அதனை அந்த பெண்ணின் கணவருக்கு  அனுப்பி பணம் கேட்டு மிரட்டிய   பிளாக்மெயிலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூரை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது செல்போனுக்கு வாட்ஸ் அப் மூலமாக புகைப்படம் ஒன்று வந்தது. அதில் தனது மனைவியுடன் இளைஞர் ஒருவர் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஏழுமலை, உடனே புகைப்படம் அனுப்பிய நபரை தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.

எதிர் முனையில் பேசிய பெருங்களத்தூர் அடுத்த சதானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த புகழேந்தி என்பவர் உனது மனைவியின் கர்பத்திற்கு நான் தான் காரணம் என கூறி செல்போனை துண்டித்துள்ளார்.

இதை கேட்டதும் மேலும் அதிர்ச்சியடைந்த ஏழுமலை, உடனடியாக தாம்பர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் புகழேந்தி மற்றும் ஏழுமலையின் மனைவி இருவரையும் அழைத்து விசாரித்தனர்.

விசாரணையில் ஏழுமலையின் மனைவி பெருங்களத்தூர் அருகே உள்ள சிவன் கோயிலுக்கு சாமி கும்பிட செல்லும் போது புகழேந்தியின் தாயாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த பழக்கத்தை பயன்படுத்தி புகழேந்தியும் நட்பாக பழகியதால் தம்பி என்ற முறையில் ஒருமுறை அவருடன் செல்ஃபி புகைப்படம் எடுத்ததாகவும், சமீப நாட்களாக அவரது நடவடிக்கை சரியில்லததால் அவரிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து புகழேந்தியை சிறப்பான கவனிப்புடன் போலீசார் விசாரித்தனர். கோவிலுக்கு வரும் போது தன்னிடம் பேசியவர் திடீரென பேசமறுத்ததால் அவருடைய கணவருக்கு அந்த புகைப்படத்தை அனுப்பி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிட்டதாக தெரிவித்தார்

அவனது செல்போனில் ஏராளமான பெண்களுடன், எடுக்கப்பட்ட செல்ஃபி புகைப்படங்களும், சில பெண்களுடன் தனிமையில் இருந்த ஆபாச வீடியோக்களும் இருந்துள்ளன.

திருமணமான பெண்களை குறி வைத்து கோவிலுக்கு வரும் போது அவர்களிடம் நட்பாக பேசி புகைப்படம் எடுத்துக் கொள்ளும் புகழேந்தி, அவர்களை மிரட்டுவதை வாடிக்கையாக்கி உள்ளான். அவனுக்கு ஒத்துழைக்காத பெண்களை மிரட்டுவதும், அவர்கள் பணிய மறுத்தால் கணவனின் செல்போனுக்கு புகைப்படத்தை அனுப்பி குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுத்துவதும் இவனது வழக்கம் என்று தெரிவித்த போலீசார், புகழேந்தியை கைது செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவிலுக்கு போனோமோ.. சாமிய கும்பிட்டோமா.. வீட்டுக்கு வந்தோமா.. என்றில்லாமல் தம்பியுடன் செல்ஃபி, அண்ணணுடன் செல்ஃபி என்று முன் பின் தெரியாதவர்களிடம் உறவுமுறை கொண்டு பழகினால் முடிவில் என்னமாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments