குளிர்பதன பெட்டி வெடித்ததில் காவல் ஆய்வாளர் உட்பட இருவர் பலியான வழக்கில் திடீர் திருப்பம்..!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே குளிர்பதன பெட்டி வெடித்ததில் காவல் ஆய்வாளர் உட்பட இருவர் பலியானதாக கூறப்படும் வழக்கில் தீயணைப்பு துறை அறிக்கையால் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சென்னை அயனாவரம் குற்றப்பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்த சபரிநாத் சில நாட்கள் விடுப்பில் தனது சொந்த ஊரான பொள்ளாச்சி அருகிலுள்ள நல்லூருக்கு சென்று தனது சொந்த வீட்டில் தங்கியிருந்தார்.
நேற்று அதிகாலை வீட்டிலிருந்து பயங்கர சத்ததுடன் புகை வெளியேறிய நிலையில், உடல் கருகிய நிலையில் ஆய்வாளர் சபரிநாத் சடலமாக மீட்கப்பட்டார்.
அவருடன், கீழ் வீட்டில் வசித்த சாந்தி என்ற பெண்ணும் உடல் கருகி, உயிரிழந்த நிலையில் கிடந்தார்.. வீட்டில் இருந்த குளிர்பதன பெட்டியில் தீப்பற்றி எரிந்திருந்த நிலையில் குளிர்பதன பெட்டி வெடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் போலீசார் கருதினர்.
இந்த நிலையில் தீப்பற்றியது குறித்து ஆய்வு செய்த தீயணைப்பு துறை குளிர்பதன பெட்டி விபத்து வெடிக்கவில்லை எனவும் அதேபோல் மின் கசிவால் விபத்து ஏற்பட்டதற்கான தடயமும் இல்லை எனவும் தீயணைப்பு துறை காவல் துறைக்கு அறிக்கை அளித்துள்ளது.
இதனால் தீ பற்றியது எப்படியென காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இருப்பினும் இருவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் விபத்தா? திட்டமிட்ட சம்பவமா? என தெரியவருமென காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Comments