மதுபான கொள்கை முறைகேடு வழக்கு : சிசோடியாவை 7 நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி
டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக, மணீஷ் சிசோடியாவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, அமலாக்கத்துறைக்கு ரோஸ் அவின்யூ நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு, ஆம் ஆத்மி அரசு மதுபான கொள்கையை அமல்படுத்தியதில், முறைகேடுகள் நடந்திருப்பதாக அறிக்கை அளித்து, சிபிஐ விசாரிக்க, டெல்லி துணை நிலை ஆளுநர் பரிந்துரைத்திருந்தார். இவ்வழக்கில், துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவை கைது செய்து, சிபிஐ விசாரணை நடத்தியது. தற்போது, அமலாக்கத்துறையின் வழக்கிலும் சிசோடியா கைதான நிலையில், டெல்லி ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, ஆதாரங்களையும், தான் பயன்படுத்திய செல்போனையும் மணீஷ் சிசோடியா அழித்துவிட்டதாக, நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்தது. பிறரது பெயரில் வாங்கப்பட்ட சிம்கார்டு, செல்போனையே சிசோடியா பயன்படுத்தியதாகவும், ஹவாலா பண பரிவர்த்தனை குறித்தும் விசாரிக்க வேண்டியிருப்பதால், 10 நாள் விசாரணை காவலுக்கு அனுமதி அளிக்குமாறும் அமலாக்கத்துறை கோரியது.
மணீஷ் சிசோடியா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிசோடியா ஊழல் புரிந்ததாக ஒரு பைசா ஆதாரம் கூட, அமலாக்கத்துறையிடம் இல்லை என வாதிட்டார். இதனையடுத்து, சிசோடியாவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
Comments