இல்லாத நிறுவனத்தை நம்பி, ரூ.82 லட்சம் வீட்டுக் கடன் கொடுத்து ஏமாந்து நிற்கும் SBI வங்கி..! தர்மபிரபு இங்கேயும் வந்துட்டீங்களா..?

0 39916
இல்லாத நிறுவனத்தை நம்பி, ரூ.82 லட்சம் வீட்டுக் கடன் கொடுத்து ஏமாந்து நிற்கும் SBI வங்கி..! தர்மபிரபு இங்கேயும் வந்துட்டீங்களா..?

சென்னையில் இல்லாத நிறுவனம் ஒன்றின் போலியான சம்பள சான்றை நம்பி, 82 லட்சம் ரூபாயை கடனாக அள்ளிக்கொடுத்து ஏமாந்து நிற்பதாக, தாம்பரம் எஸ்.பி.ஐ வங்கியின் உதவி பொதுமேலாளர் போலீசில் வினோத புகார் ஒன்றை அளித்துள்ளார் . போலியான சொத்து மதிப்பீட்டு சான்றளித்த பொறியாளர்கள் போலீசால் தேடப்படும் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...

தாம்பரம் SBI வங்கியின் உதவி பொது மேலாளராக பணிபுரிந்து வரும் ஈஸ்வர மூர்த்தி என்பவர் தாம்பரம் காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்றை அளித்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு SBI வங்கியின் கேளம்பாக்கம் கிளையில், FOUR CROSS என்ற தனியார் நிறுவனத்தில் உயர் பொறுப்பில் பணிபுரிவதாக கூறி விஷ்ணுகுமார் என்பவர் வீட்டு கடன் வேண்டி விண்ணப்பித்தார். கடனுக்கு தேவையான ஆவணங்களுடன் விஷ்ணுகுமாரின் 6 மாத சம்பள விபர சான்றிதழும் இணைக்கப்பட்டு இருந்தது.

விஷ்ணுகுமார் அதிக சம்பளம் பெறுவதாக குறிப்பிடப்பட்டிருந்ததாலும், எஸ்.பி.ஐ வங்கியின் சொத்து மதிப்பீட்டு பொறியாளர்களான ஜெயசந்திரன், ரமேஷ்குமார் நடராஜன் சான்றழித்ததை நம்பியும், கோயம்பேடு சாஸ்திரி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் பிளாட்டிற்காக, 82 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை பில்டர் சந்தோஷ் என்பவரின் வங்கிக்கணக்கிற்கு SBI வங்கி செலுத்தியுள்ளது.

வங்கியில் இருந்து கடன் வாங்கிய விஷ்ணுகுமார் மூன்று வருடங்கள் ஆகியும், ஒரே ஒரு மாத தவணைத் தொகைமட்டும் கட்டிவிட்டு தொடர்ந்து தவணை கட்டாததால் வட்டியுடன் 1 கோடியே 38 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டியதால் அந்த பணத்துக்காக, பிளாட்டை கைப்பற்றும் திட்டத்துடன் கோயம்பேடு சாஸ்திரி நகருக்கு வங்கி அதிகாரிகள் சென்றுள்ளனர்.

வங்கியின் சொத்து மதிப்பீட்டாளர்கள் குறிப்பிட்ட மதிப்பிலான பிளாட்டு அங்கு இல்லை, என்றும் அங்கிருந்த 538 சதுர அடி பிளாட்டின் 2022 ஆம் ஆண்டின் மதிப்பே மொத்தம் 75 லட்சம் தான் என்பது தெரியவந்தது. இதாவது உள்ளதே என்று அதனை கைப்பற்றி சீல் வைத்தனர்.

இதையடுத்து விஷ்ணுகுமார் பணிபுரிவதாக கூறி சம்பள விவரச்சான்று கொடுத்த FOUR CROSS என்ற தனியார் நிறுவனத்தை தேடிச்சென்றபோது, அந்த முகவரியில் அப்படி ஒரு நிறுவனமே இல்லை, அதுவும் போலி என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலி ஆவணங்களை வழங்கியதாக விஷ்ணுகுமார், குறைந்த மதிப்புள்ள பிளாட்டை அதிக விலைக்கு ஏமாற்றி விற்றதாக பில்டர் சந்தோஷ், மோசடிக்கு உடந்தையாக இருந்த வங்கியின் சொத்து மதிப்பீட்டாளர்களான ஜெயசந்திரன், ரமேஷ்குமார் நடராஜன் உள்ளிட்டோர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஈஸ்வர மூர்த்தி அந்த புகார் மனுவில் கூறி இருந்தார்.

இந்த புகார் குறித்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள, தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.

இதையடுத்து தலைமறைவாக இருந்த மடிப்பாக்கத்தை சேர்ந்த பிராடு பில்டர் சந்தோஷை பிடித்து விசாரித்தனர். அதில் தனக்கு வங்கி கொடுத்த பணத்தில் 19 லட்சம் ரூபாயை வங்கியின் சொத்து மதிப்பீட்டு அதிகாரிகளில் ஒருவரான ரமேஷ்குமார் நடராஜனுக்கு வழங்கியதாக அவர் தெரிவித்தார்.

இதையடுத்து பிராடு பில்டர் சந்தோஷை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த போலி வீட்டுக்கடன் மோசடியில் தலைமறைவாக உள்ள விஷ்ணுகுமார், வங்கியின் சொத்துமதிப்பீட்டு அதிகாரிகளான ஜெயசந்திரன், ரமேஷ்குமார் நடராஜன், ஐஸ்வர்யா மற்றும் சஞ்சீவ் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர். வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு ஒவ்வொரு மாத இ.எம்.ஐயும் பிரச்சனை என்றால், கேளம்பாக்கம் எஸ்.பி ஐ வங்கிக்கு இந்த வீட்டுக்கடனே பிரச்சனையாக மாறி இருப்பதால், எத்தனை பேருக்கு இதுபோன்று போலியான சம்பள விபர சான்று மற்றும் போலியான சொத்து மதிப்பீட்டு அறிக்கையை நம்பி கடன் வழங்கப்பட்டுள்ளது என்று, உயரதிகாரிகள் விரிவான ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments