ஆரம்பிங்காலங்களா... ஒத்த ரூபாய் அனுப்பி ரூ.65 ஆயிரம் அபேஸ்..! ஜி பே சீட்டர்ஸ் பராக்
காஷ்மீரில் இருந்து ஆன்லைன் மூலமாக தூத்துக்குடியில் உள்ள வியாபாரியிடம் பர்னிச்சர் வாங்குவது போல நடித்து ஜி பேயில் ஒரு ரூபாய் அனுப்பச்சொல்லி 65 ஆயிரம் ரூபாயை அபேஸ் செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் கோவில்பட்டி மற்றும் அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.
கார்த்திகேயனிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரில் இருந்து சாகில் குமார் என்ற பெயரில் வாட்ஸ் அப் சாட்டிங்கில் ராணுவ வீரர் உடையுடன் இருந்த நபர் பேசி உள்ளார். சாத்தூரில் உள்ள தனது நண்பருக்கு அன்பளிப்பாக கொடுக்க பர்னிச்சர் சாமான்கள் வேண்டும் என்றும், அவரது கடையை ஆன்லைன் மூலம் பார்த்து தெரிந்து கொண்டதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய கார்த்திகேயன், சாகில் குமாருக்கு வாட்ஸ் அப் மூலம் சோபா மேஜை கட்டில் உள்ளிட்டவற்றின் மாடல்களை அனுப்பி உள்ளார்.
மறுநாள் கார்த்திகேயனிடம் மீண்டும் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்ட சாகில் குமார் தனக்கு குறிப்பிட்ட சோபா மற்றும் கட்டில் பிடித்துள்ளதாகவும், என்ன விலை என்றும் கேட்டுள்ளார்.
80,000 ரூபாய் என்ற உடன் முதலில் 65,000 ரூபாய்க்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்புவதாக கூறியுள்ளார். தங்களது கடையின் கூகுள் ஸ்கேனரை அவருக்கு வாட்ஸ் அப் மூலம் கார்த்திகேயன் அனுப்பி உள்ளார்.
சாகில் குமாரோ, தான் ராணுவத்தில் இருப்பதால் தங்கள் நிறுவனத்துக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்ப முடியாது எனவே ஜி பே உள்ள தங்களது பெர்சனல் நம்பரை தாருங்கள் என்று கேட்டுள்ளார்
இதைத்தொடர்ந்து கார்த்திகேயன் தனது மகன் அருண்குமாரின் ஜி பே வங்கி கணக்கு உள்ள செல்போன் எண்ணை சாகில் குமாருக்கு அனுப்பி உள்ளார். அதில் இரண்டு தடவை ஒரு ரூபாய் ,ஒரு ரூபாய் என பணம் அனுப்பிய சாகில் குமார் அடுத்த கட்டமாக தான் 65 ஆயிரம் ரூபாய் அனுப்புவதாக கூறியுள்ளார்.
பின்னர் பணத்துக்கு பதிலாக கூகுள் பேயில் உள்ள குறுந்தகவலில் 65 ஆயிரம் ருபாய்க்கான லிங்க் ஒன்றை ரெக்வஸ்ட்டாக அனுப்பி உள்ளார். பணம் தான் வந்திருப்பதாக நினைத்து கார்த்திகேயனின் மகன் அந்த லிங்கை தொட்டவுடன், அவரது வங்கி கணக்கில் இருந்து 65,000 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் மற்றும் அவரது குடும்பத்தினரும் சாகில் குமாரை தொடர்பு கொண்டு தங்களது அக்கவுண்டில் இருந்து பணத்தை எடுத்து உள்ளீர்கள் என கேட்டதற்கு , எனக்கு google pay மூலம் ரூ.500 அனுப்புங்கள் உங்கள் பணத்தை திருப்பித் தருகிறேன் என ஆசை வார்த்தைக் கூறியுள்ளார்.
தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கார்த்திகேயன் குடும்பத்தினர் 30 ஆயிரம், 35 ஆயிரம் 18 ஆயிரம் என அடுத்தடுத்து வந்த குறுந்தகவல் லிங்க் ரெக்வஸ்ட்டை தொடவில்லை என்பதால் கூடுதல் பணம் இழப்பது தப்பியது. பாதிக்கப்பட்ட கார்த்திகேயன் தூத்துக்குடி மாவட்ட சைபர் க்ரைம் குற்றப்பிரிவு காவல் துறையில் மோசடி நபர் சாகில் குமார் குறித்து புகார் அளித்தார்.
Comments