நெல்லில் விஷம் கலந்து 42 மயில்கள் கொலை.. வயல் வெளியில் அட்டூழியம்..! மர்ம நபரை வனத்துறை தேடுகின்றது
மதுரை ஆண்டார் கொட்டாரம் பகுதியில் வயல்வெளிகளில் மேய்ந்த 40 க்கும் மேற்பட்ட மயில்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த மயில்களை சேகரித்த வனத்துறையினர், குருணை மருந்து கலந்த நெல்லை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்
மதுரை ஆண்டார் கொட்டாராம் பகுதியில் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளது. அதில் 10 ஏக்கர் அளவிற்கு பயிரிடப்பட்ட நெல் வயல் ஒன்று அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. அதன் அருகிலேயே கண்மாய் மற்றும் கருவேல மரங்கள் அடர்ந்த காட்டு பகுதி உள்ளது
இந்த கருவேலமரக்காட்டுக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட மயில்கள் வசித்து வந்த நிலையில் சம்பவத்தன்று அங்குள்ள வயல் வெளியில் ஒன்பது மைல்கள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
மாவட்ட வனத்துறை அதிகாரி மற்றும் வன அலுவலர் உள்ளிட்டோர் இப்பகுதியில் வந்து ஆய்வு செய்தபோது திங்கட் கிழமை ஒரே நாளில் 18 மயில்கள் ஆங்காங்கே இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு எடுத்து சென்றனர்.
செவ்வாய்கிழமையும் இப்பகுதியில் ஏராளமான மயில்கள் இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அந்த காட்டு பகுதியில் இருந்து 18 மயில்களை கைப்பற்றி எடுத்து சென்றனர் இதுவரை இந்தப் பகுதியில் 40க்கும் மேற்பட்ட மயில்கள் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் வனத்துறையினர் அங்குள்ள வயல் வெளி பகுதியில் குருணை மருந்து கலந்த நெல்மணிகளை கைப்பற்றினர்.
இப்பகுதியில் தற்போது ஒரே ஒரு வயல் மட்டுமே அறுவடைக்கு தயாராக இருப்பதாகவும், சில தினங்களாக அந்த வயலில் ஏராளமான மயில்கள் இறங்கி நெல்மணிகளை திண்று வந்ததாக கூறப்பட்டுகின்றது. இந்த நிலையில் மயில்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டுள்ளதால் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
Comments