தனியார் பாலில் கலப்படம்.. 1500 லிட்டர் பால் பறிமுதல்.. கலெக்டர் நேரடி ஆக் ஷன்..! ஆவினுக்கு பால் கொடுக்க மிரட்டல் என புகார்
தூத்துக்குடி மாநகரில் பாலில் தண்ணீர் மற்றும் ரசாயணம் கலந்து விற்கப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி 1500 லிட்டர் பாலை பறிமுதல் செய்த நிலையில், ஆவின் நிறுவனத்துக்கு பால் கொடுக்காததால் வியாபாரிகளை மிரட்டும் வகையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது..
தூத்துக்குடி மாநகருக்கு ஓட்டப்பிடாரம் , கயத்தாறு , விளாத்திகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து அதிகாலை பேருந்து மற்றும் சரக்கு வாகனங்கள் மூலம் ஏராளமான கேண்களில் பால் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றது. தனியார் மூலம் விற்பனை செய்யப்படுகின்ற அந்த பாலில் தண்ணீர் மற்றும் கெமிக்கல் கலக்கப்படுவதாக புகார்கள் வந்ததாக கூறி மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், அமெரிக்கன் ஆஸ்பத்திரி ஆகிய பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், பால்வளத் துறை அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறை மற்றும் மாநகராட்சி ,காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து இந்த ஆய்வில் ஈடுபட்டனர்
பல்வேறு பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட பாலை சோதனை செய்ததில் பாலின் மேல் பகுதியில் மஞ்சள் நிறத்தில் காட்சி அளித்ததால், அதில் தண்ணீர் மற்றும் சுக்ரோஸ், குளுக்கோஸ் போன்ற ரசாயனம் கலந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
3 பகுதிகளில் இருந்து மொத்தமாக 1500 லிட்டர் பால் பறிமுதல் செய்யப்பட்டதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்த மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் , பால் ஆய்வு செய்யப்படுவதை பார்வையிட்டார். அவரிடம் கேன்களில் உள்ள பால் தரமற்றது என்பதை அதிகாரிகள் விளக்கினர்
பறிமுதல் செய்யப்பட்ட மொத்த பாலும் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று அதிகாரிகள் கூறியதால் அவற்றை அழிக்கவும் ஆட்சியர் உத்தரவிட்டார். ஆய்வின் முடிவில் அந்த பாலில் தண்ணீர் கலக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்த அதிகாரிகள் அதனை விற்பனைக்காக எடுத்துச்சென்ற ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த இருவருக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
இந்த நிலையில் சோதனை என்ற பெயரில் திட்டமிட்டு தனியார் விற்பனையாளர்கள் அரசால் மிரட்டப்படுவதாக பால்முகவர்கள் சங்க தலைவர் பொன்னுச்சாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.
Comments