பூரானாவது.. பூனையாவது.. எடுத்துப்போட்டு தூர்வாரு... உணவுப்பிரியர் அதிர்ச்சி..! பூரான் பிரியாணி பரிதாபங்கள்

0 7179

சாத்தான்குளம் ஓட்டலில் சிக்கன் பிரியாணி கேட்டவருக்கு பூரான் பிரியாணி கொடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது. பிரியாணியில் பூராண் கிடப்பது தெரியாமல் ருசித்து சாப்பிட்ட உணவுப்பிரியரின் நிறைஞ்ச மனசு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மெயின் பஜாரில் யாக்கோபு பிரியாணி ஸ்டால் என்ற ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலுக்கு சொக்கலிங்க புரத்தை சேர்ந்த அன்பு என்பவர் சாப்பிட சென்றுள்ளார். சிக்கன் பிரியாணி, சிக்கன் 65 ஆர்டர் செய்த அன்பு, பசி ருசியறியாது என்பது போல செல்போனை பார்த்துக் கொண்டே சாப்பிட தொடங்கினார்

கண்கள் செல்போனில் மூழ்க... பிரியாணியை ஒரு பிடி பிடித்தார் அன்பு..

பிரியாணியை முழுவதுமாக சாப்பிட்டு முடித்த பின்னர், தான் இலையின் ஓரத்தில் எடுத்து வைத்த எலும்பில் ஒட்டி இருந்த மிச்சம் மீது சிக்கனை எடுத்து சாப்பிட்டார்.

அப்போது அவரது இலையில் பிரியாணியுடன் வேகவைக்கப்பட்ட பூராண் ஒன்று கிடப்பதை கண்டு ஷாக் ஆனார். ஒரு பருக்கை விடாமல் ருசித்து சாப்பிட்டு விட்டோமே என்ற பீதியில் அதனை தனது செல்போனில் படம் எடுத்தார்

கடைக்காரரை அழைத்து பிரியாணியில் பூராண் கிடப்பதாக அன்பு கூறிய நிலையில் , பூராண் தானே கிடந்தது...?பூனையா செத்து கிடந்தது ? என்பது போல அந்த தட்டில் இருந்த கழிவுகளை குப்பையில் கொட்டிச்சென்றார் அந்த ஊழியர்

இதையடுத்து அன்புவிடம் நீங்கள் சாப்பிட்ட பிரியாணிக்கு பணம் வேண்டாம் என்று கடை உரிமையாளர் கூறிய நிலையில் தான் பிரியாணியை முழுமையாக சாப்பிட்டு விட்டதாகவும், அதற்கு பணம் வாங்கிக் கொள்ளுங்கள் இனி இது போன்று கவனக்குறைவாக பிரியாணியை வாடிக்கையாளர்களுக்கு வழங்காதீர்கள் என்று கூறி நிறைஞ்ச மனதுடன் பணம் கொடுத்துச்சென்றதாக கூறப்படுகின்றது.

பூராண் பிரியாணி விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த ஓட்டல் உரிமையாளர் யாக்கோபு, முழு பிரியாணியையும் சாப்பிட்ட பின்னர் இலையில் எப்படி பூராண் வந்தது ? என்று தெரியவில்லை , நான் தரமான பொருட்களை கொண்டு அஜின மோட்டோ சேர்க்காமல் பிரியாணியை தயார் செய்கிறேன். எனது உறவினர்களே எனக்கு தொழில் விரோதிகளாக உள்ளனர் என்று வேதனை தெரிவித்தார்

உணவு பாதுகாப்புத்துறையினரின் ஆழ்ந்த தூக்கத்தால் சில உணவகங்களில் பூனையையே , மட்டன்னு நம்பி சாப்பிட்டிக் கொண்டிருக்கும் நிலையில் பூராண் எல்லாம் ஒரு பிரச்சனையா ? என்பதே உணவுப்பிரியர்களின் ஆதங்கமாக உள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments