மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து மாநில சட்டசபைத் தேர்தல் முன்னிலை நிலவரம்!

0 2478

நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களில் பாஜக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேகாலயாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தேசிய மக்கள் கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.

தலா 60 தொகுதிகளை கொண்ட திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

நாகாலாந்து மாநிலத்தில் என்.டி.பி.பி - பாஜக கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 31 இடங்களை விட கூடுதலான இடங்களில் முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 2 இடங்களில் மட்டும் முன்னிலையில் உள்ளது. என்டிபிபி கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் நெய்பு ரியோ வடக்கு அங்கமி தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.

திரிபுராவிலும் பாஜக கூட்டணி பெரும்பான்மையை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சியை தக்கவைக்கிறது. காங்கிரஸ் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி 15 இடங்களிலும், திப்ரா மோதா 10 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. போர்டோவாலி தொகுதியில் பாஜகவைச் சேர்ந்த முதலமைச்சர் மாணிக் சாஹா வெற்றிபெற்றுள்ளார்.

மேகாலயாவில் சோஹியாங் தொகுதியில் வேட்பாளர் ஒருவர் உயிரிழந்ததால், 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் ஆளும் தேசிய மக்கள் கட்சி 26 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக, காங்கிரஸ் தலா 5 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

முதலமைச்சரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான கொன்ராட் சங்மா முன்னிலை வகித்து வருகிறார். எந்த கட்சிக்கும் அம்மாநிலத்தில் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜகவுடன், கூட்டணி அமைத்து என்பிபி ஆட்சியமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments