ரஷ்யா-உக்ரைன் போர் ஓராண்டு நிறைவு

0 1724

சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ராணுவவீரர்கள் இறந்த நிலையில் ஓராண்டை நிறைவு செய்துள்ளது இந்த போர்.

இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்த பின்னர், ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் இணைந்து நேட்டோ அமைப்பை உருவாக்கின. 1991ம் ஆண்டில் சோவியத் யூனியன் 15 நாடுகளாக பிரிந்த நிலையில், நேட்டா அமைப்பு கலைக்கப்படுவதற்குப் பதிலாக பிரிந்து வந்த சில நாடுகளையும் சேர்த்துக் கொண்டது.

இது ரஷ்யாவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்திய நிலையில், சோவியத்திலிருந்து பிரிந்த மற்றொரு நாடான உக்ரைனும் நேட்டோவில் இணையும் முயற்சியை மேற்கொண்டது. இது, ரஷ்யாவிற்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியதால் உக்ரைனுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால், ரஷ்ய எச்சரிக்கையை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சட்டை செய்யாததால் 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி சிறப்பு ராணுவ நடவடிக்கையை அறிவித்தார் ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின்.

படைபலம் குன்றிய உக்ரைன் விரைவில் வீழ்ந்து விடுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா இணைந்து சுமார் 12,800 கோடி டாலர்களுக்கு ஆயுதங்களை வழங்கியது.

போரில் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிரிழப்பு, பொதுமக்கள் பலி என கடுமையான சூழலுக்கும் இடையிலும் உலக நாடுகளின் உணவு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக கருங்கடல் பகுதியில் தாக்குதல் நடத்துவதில்லையென இருநாடுகளும் ஒப்பந்தம் செய்துக் கொண்டன.

போரை நிறுத்துவதற்குப் பதிலாக தங்களது ஆயுதங்களை சோதித்து பார்க்கும் சோதனைக் கூடமாக உக்ரைனை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மாற்றி விட்டதே போர் தொடர்வதற்கு காரணமென நிபுணர்கள் கூறும் நிலையில், இருதரப்பு பேச்சுவார்த்தை மட்டுமே போரை நிறுத்துவதற்கான நிரந்தர தீர்வு என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments