போனா வராது .. பொழுது போனா கிடைக்காது.. கையில புடிங்க ஸ்மார்ட் வாட்ச்..! ஓட்டுக்கு அள்ளிக்கொடுக்குறாங்க..!
ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களை கவர்வதற்காக சில பகுதிகளில் வீட்டுக்கு ஒரு ஸ்மார்ட் வாட்ச் கொடுக்கப்பட்டது. வாக்காளர்களை கவர வாழைத்தோட்டத்திற்குள் வைத்து இசைக்கச்சேரி நடத்தப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைதேர்தல் வந்தாலும் வந்தது, அங்குள்ள வாக்களர்களுக்கு பரிசு பொருட்களாக பட்டுப்புடவை , வேட்டி, வெள்ளிக்கொலுசு, குக்கர் , தினமும் 1000 ரூபாய் பணம் என பரிசு பொருட்களும், பணமும் அரசியல் கட்சியினரால் அள்ளி வழங்கப்படுகின்றது...
அந்தவகையில் இன்றைய பரிசு பொருளாக, சில பகுதிகளில் இதய துடிப்பையும், ஆக்ஸிசன் அளவையும் அப்படியே காட்டும் ஸ்மார்ட் வாட்ச் வழங்கப்பட்டது.
வீட்டுக்கு ஒரு ஸ்மார்ட் வாட்ச் என்ற அடிப்படையில் இரு சக்கர வாகனத்தில் வந்து கையில் வழங்கிச்சென்ற அரசியல் கட்சியினர் தங்கள் கட்சியின் சின்னத்தில் வாக்களிக்க கூறிச்சென்றனர்.
ஊருக்குள் வைத்து பணம் கொடுத்தால் யாராவது கேமராவோடு புகுந்து விடுகிறார்கள் என்று உஷாராக வாழைத்தோட்டத்திற்குள் அழைத்துச்செல்லப்பட்டு அங்குள்ள திடலில் இசைக்கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
எந்த டோக்கன் எங்க உட்காரனும் என்று முன்கூட்டியே செய்த பிளான் படி வாக்காளர்கள் அமரவைக்கப்பட்டனர்.
அலைகடலென திரண்டு இருந்த கூட்டத்துக்கிடையே , தட்டி பந்தலின் கீழ் நின்று கானக்குயில் தனது தத்துவப்பாடலை பாட தொடங்கியதும் சிறுவன் ஒருவன் தங்கள் சிச்சிவேசனை சைகையால் காண்பித்தபடி நின்றான்..!
Comments