அதிமுக பொதுக்குழு செல்லும்.. உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உச்சநீதிமன்றத்தால் ஏற்பு.. ஒற்றைத் தலைமையின் கீழ் வரும் அதிமுக..!
கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதன் மூலமாக எடப்பாடி பழனிசாமியின் ஒற்றைத் தலைமையின் கீழ் அதிமுக வந்துள்ளது.
கடந்தாண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழுவில், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியும், 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த தீர்மானத்தை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில், அதிமுகவின் பொதுக்குழு செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பினர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், கட்சியின் சட்ட விதிகளின் படியே பொதுக்குழு நடைபெற்றுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், பொதுக்குழு செல்லும் என்று, சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்தி உத்தரவிட்டனர்.
மேலும், அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள், பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக நடைபெற்றும் வரும் சிவில் வழக்குகளை இந்த தீர்ப்பு கட்டுப்படுத்தாது என்றும் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
Comments