அண்ணாசாலையில் நில அதிர்வு ? எங்களுக்கு சம்பந்தமில்லை கையை விரித்தது மெட்ரோ... காரணமே தெரியாததால் குழப்பம்..!
சென்னை அண்ணாசாலையில் நில அதிர்வு உணரப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மெட்ரோ ரயில் பணிகளால் அதிர்வு ஏற்பட்டதாக வெளியான தகவலை மெட்ரோ நிர்வாகம் மறுத்துள்ளது.
சென்னையில் அண்ணா சாலை அடுத்த ஒயிட் சாலையிலுள்ள ஒரு சில கட்டடங்களில் காலை சரியாக 10:05 மணிக்கு நில அதிர்வு உணரப்பட்டதாகக் தகவல் வெளியானது.
அப்போது அலுவலகங்களில் பணியில் இருந்த ஊழியர்கள் அச்சத்தில் வெளியேறியுள்ளனர். அங்குள்ள உயரமான மூன்று கட்டிடங்களில் இரண்டிலிருந்து மூன்று நொடிகளுக்கு இந்த அதிர்வு உணரப்பட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
சாலையோரம் காரை நிறுத்திவிட்டு உள்ளே அமர்ந்திருந்த நபர் ஒருவரும் சாலையில் சென்ற சிலரும் நில அதிர்வை உணர்ந்ததாகக் கூறினர்.
நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படும் இடத்திலிருந்து மிக அருகில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை வழியாக இயக்கப்பட்டு வருகிறது.
அப்பகுதியில் வேறு ஏதேனும் மெட்ரோ பணிகள் நடைபெறுகிறதா? அதனால் இந்த அதிர்வு ஏற்பட்டதா? என அண்ணாசாலை காவல் துறையினர் விசாரணையில் இறங்கினர்
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம், அண்ணா சாலையில் சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு போக்குவரத்து இயங்கிக் கொண்டிருப்பதாகவும் இந்த அதிர்வுக்கும், மெட்ரோ ரயில் பணிகள் காரணமல்ல எனவும் தெரிவித்துள்ளது.
மாதவரம் பகுதியில் மட்டுமே மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை பணிகள் நடைபெற்று வருவதாகவும் சுரங்கம் தோண்டும் பணியின் போது 100 மீட்டர் தொலைவுகளில் நில அதிர்வுகள் ஏற்படுகிறதா ? என்பது குறித்து நவீன கருவிகள் மூலம் தொடர்ந்து 24 மணிநேரமும் கண்காணித்து வருவதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அப்படி கண்காணித்து வருவதில் இதுவரை எந்தவிதமான நில அதிர்வுகளும் அங்கு ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Comments