உங்கள் பணத்துக்கு நாள் வட்டி.. எங்க பணமுன்னா இளக்காரமா..? பைனான்ஸ் கம்பெனிக்கு பூட்டு..! இளைஞரின் தரமான சம்பவம்
காரைக்குடியில், வீட்டு அடமானக்கடனை முழுவதுமாக செலுத்திய பின்னரும் வீட்டுப்பத்திரத்தை கொடுக்காமல் அலைக்கழிப்பதாக குற்றஞ்சாட்டிய வாடிக்கையாளர், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தை இழுத்துப்பூட்டி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 100 அடி சாலையில் எக்யூடாஸ் என்ற தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் இரும்பு கேட்டை இழுத்து பூட்டிய தேவகோட்டை ராம்நகர் பகுதியைச் சேர்ந்த பாபு என்பவர் வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.
எக்யூடாஸ் நிறுவன ஊழியர்கள் கேட்டைத் திறக்குமாறு கூறியபோது, தன்னிடம் மொத்தமாக பணம் வாங்கி 10 நாட்களாகியும், அடமானம் வைத்த வீட்டுப் பத்திரத்தை கொடுக்க மாட்டேங்கறீங்க, உங்கள் பணமுன்னா நாள் வட்டி போடுறீங்க, எங்க பணம்னா இளக்காரமா? என்று ஆவேசமானார் பாபு.
பைனான்ஸ் ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல் உதவி ஆய்வாளரிடம், எக்யூடாஸ் நிறுவன மேலாளர் தனது பணத்தை வாங்கிக் கொண்டு அலைக்கழிப்பதாகத் தெரிவித்தார். தனது வீட்டை அடமானம் வைத்து 9 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெற்ற பாபு, கடந்த ஒரு வருடம் மாதாந்திர தவணைத் தொகை தவறாமல் செலுத்தியதாக தெரிவித்தார். வேறொரு நிறுவனத்தில் கூடுதலாக கடன் தருவதாக கூறியதால், 10 நாட்களுக்கு முன்பு இந்த மைக்ரோ பைனான்ஸ் நிறுவன மேலாளரிடம் கடன் தொகையை மொத்தமாக கட்டி உள்ளார் பாபு. ஆனால் அவருக்கு வீட்டுப்பத்திரம் மற்றும் கடன் இல்லை என்ற தடையில்லா சான்று ஆகியவற்றை வழங்கவில்லை என்று உதவி ஆய்வாளரிடம் புகார் தெரிவித்தார்.
தேவகோட்டையில் இருந்து தினமும் காரைக்குடிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்வதாக கூறிய பாபு , தன்னிடம் வாங்கிய பணத்துக்கு எக்யூடாஸ் மைக்ரோ பைனான்ஸில் இருந்து ஒருவர் கூட முறையான பதில் கூறவில்லை என்றும், தன்னிடம் பணம் பெற்ற பைனான்ஸ் மேலாளர் தனது செல்போன் நம்பரை பிளாக் செய்ததால், தனக்கு வீட்டுப்பத்திரம் கிடைக்காமல் போய்விடுவோ? என்ற ஆதங்கத்தில் இரும்புக்கேட்டை இழுத்துப்பூட்டி போராட்டம் நடத்தியதாக தெரிவித்தார்.
இது போன்ற பிரச்சனை என்றால் இப்படி நடந்துகொள்ளக்கூடாது என்று எச்சரித்த காவல் உதவி ஆய்வாளர், பாபு மற்றும் எக்யூட்டாஸ்
மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். எந்த ஒரு கூட்டு வட்டியும் போடாமல் பாபு கொடுத்த பணத்துக்கு அவரது வீட்டுப்பத்திரத்தை திருப்பி வழங்கும்படி அறிவுறுத்திய போலீசார், இல்லையேன்றால் பாதிக்கப்பட்ட பாபு அளித்த புகாரின் பேரில் மோசடி வழக்கு பதிவு செய்யப்படும் என்று எச்சரித்து அனுப்பினர்.
Comments