ஜாக்குவார் காரில் வந்து விவிஐபி வீடுகளில் கொள்ளை.. பலே வடமாநில கும்பல் கைது..!

0 2906
ஜாக்குவார் காரில் வந்து விவிஐபி வீடுகளில் கொள்ளை.. பலே வடமாநில கும்பல் கைது..!

சென்னையை அடுத்த நீலாங்கரையில் மிக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளை மட்டுமே குறிவைத்து ஜாக்குவார் காரில் வந்து கொள்ளையடிக்கும் வடமாநில கும்பலைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை கிழக்குக் கடற்கரை சாலை நீலாங்கரையில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் மிக முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் வசித்து வருகின்றனர். கடந்த 6ஆம் தேதி நீலாங்கரை புளூ பீச் சாலை கேசுவரினா டிரைவ் பகுதியில் ஜாக்குவார் காரில் நள்ளிரவு வந்த கும்பல் ஒன்று அங்குள்ள டிவி.எஸ் குழும உரிமையாளரின் வீடு, தோல் தொழிற்சாலை உரிமையாளரின் வீடு மற்றும் தொழிலதிபர் வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்க முயன்றுள்ளது. இதில் தோல் தொழிற்சாலை உரிமையாளர் நையார் சுல்தான் என்பவர் வீட்டில் மட்டும் 1000 ரூபாய் மற்றும் வாசலில் இருந்த செருப்பை அந்த கும்பல் திருடி சென்றுள்ளது.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த நீலாங்கரை போலீசார் ,அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் கொள்ளையர்கள் வந்த காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். இதில் அந்த எண் போலி பதிவெண் என்பதும், புழல் பகுதியில் உத்தரபிரதேச மாநிலத்தின் ஒரிஜினல் நம்பர் பிளேட்டை மாற்றி சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து விசாரித்த போது கார் உரிமையாளர் உத்தரபிரதேசத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர் என்பதும், சிறையில் பழக்கமான உத்தரபிரதேச கொள்ளை கும்பல் தலைவன் சஞ்சய் யாதவிடம் காரை கொடுத்ததும் கண்டறியப்பட்டது.

இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு டோல்கேட்டில் பதிவான பாஸ்டேக் விவரங்கள் மூலம் காசியாபாத்தில் பதுங்கி இருந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கொள்ளையன் ராஜேஷ் குமார் யாதவ் மற்றும் புனித் குமாரை கைது செய்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

அவர்கள் 2 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சஞ்சய் யாதவ் தலைமையில் 3பேர் கொண்ட கும்பல் ஒன்று கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. வடமாநிலங்களில் மட்டுமே கைவரிசை காட்டி வந்த இந்த கும்பல், கூகுள் மேப் மூலமாக சென்னையில் வி.வி.ஐபி ஏரியாக்களை தெரிந்து கொண்டு ஜாக்குவார் கார் மூலமாக நீலாங்கரை பகுதிக்கு வந்து கொள்ளையில் ஈடுபட்டதும், குறிப்பாக 80ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு வெறும் 1000 ரூபாய் மற்றும் செருப்பு ஜோடியை மட்டும் கொள்ளையடித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்து வரும் சஞ்சய் யாதவ் மற்றும் இர்பான் ஆகியோரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments