இந்தியா-பாக். எல்லையான குஜராத் ஹராமி நல்லாவில் புதைசேற்றிலும் ரோந்துப்பணி

0 1802

இந்தியா - பாகிஸ்தான் எல்லையான, குஜராத்தில் உள்ள ஹராமி நல்லாவில் 22 கிலோமீட்டர் தூரத்திற்கு எல்லையில் பாதுகாப்பு வேலி இல்லாத நிலையில், புதைச் சேற்றில் சிக்காமல் இருக்க இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஒருவருக்கொருவர் கயிறு கட்டி ரோந்து சென்று பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.. 

குஜராத் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதியான கட்சு மாவட்டம் சர் க்ரிக் நீர்நிலைப் பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. 1968-ல் சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் இந்தியா தனது உரிமையை நிலைநாட்டியிருந்தாலும், சர் க்ரிக் பகுதியை பாகிஸ்தான் தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது.

ஆசியாவிலேயே அதிக மீன் வளம் உள்ள 96 கிலோ மீட்டர் தொலைவுள்ள சர் க்ரீக் கால்வாயை வசப்படுத்த வேண்டும் என்ற பாகிஸ்தானின் முயற்சியின் பின்னால் வேறொரு முக்கிய காரணமும் உள்ளது. நீர் நிலைகளும் அதைத் தொடர்ந்து சதுப்பு நிலப்பகுதியும் இயற்கையாகவே அமைந்துள்ளதால் எல்லை வேலிகள் அமைக்க முடியாத இந்தப் பகுதியின் மூலமாக எளிதில் ஊடுருவ முடியும் என்பது தான்.

இயற்கையின் சூழல் எதிராக இருந்தாலும் எல்லைகளை பாதுகாப்பதில் எத்தகைய சூழலையும் இந்திய வீரர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். கட்சு மாவட்டத்தின் ஒரு பகுதி வழியாக பாகிஸ்தான் இந்திய எல்லைக்குள் ஊடுருவி சர்தார் போஸ்ட் முகாமில் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் சிலர் உயிரிழந்தனர்.

அதுவரை மாநில ஆயுதப்படை பிரிவுகளே எல்லையை பாதுகாத்து வந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு பிறகு சர்வதேச எல்லைகளை பாதுகாக்க பி.எஸ்.எஃப் எனப்படும் எல்லை பாதுகாப்பு படைப்பிரிவை இந்தியா உருவாக்கியது.

சர் க்ரீக் பகுதியில் மீன் பிடிக்க இரு நாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளநிலையில், தடையை மீறி மீன்பிடிக்க வரும் பாகிஸ்தான் மீனவர்கள் போர்வையில் ஊடுருவ முயற்சிக்கலாம் என்பதால் இந்திய வீரர்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சர் க்ரீக் நீர்நிலை அமைந்துள்ள சதுப்பு நில பகுதியில் பிஎஸ்எஃப்-ன் ஒரு பிரிவான க்ரொகடைல்ஸ் கமாண்டோ (Crocodile commandos) வீரர்கள் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரச்சனைக்குரிய சர் க்ரீக் பகுதியில் தான், ஹராமி நல்லா என்ற சதுப்பு நிலப் பகுதியும் அமைந்துள்ளது. நீர்நிலைப் பகுதியில் அதிவேக படகுகள் மூலம் ரோந்து செல்லும் வீரர்கள், 22 கிலோமீட்டர் தொலைவு உள்ள ஹராமி நல்லா சதுப்பு நிலப்பகுதியை பாதுகாப்பதில் கடும் சவாலை சந்தித்து வருகின்றனர்.

புதை சேறாக உள்ள இப்பகுதியில், இந்திய வீரர்கள் இடுப்பில் கயிறு கட்டிக் கொண்டு, ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் சேற்றில் கை வைத்தால் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்ற பழமொழி, இந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கும் பொருந்தும்..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments