போக்கு வரத்து போலீசா.. வழிப்பறி கொள்ளையர்களா ? செல்போனை உடைத்து ரகளை..!
சென்னை கோயம்பேட்டில் லாரியை மறித்த போக்குவரத்து போலீசாரை செல்போனில் படம்பிடித்ததற்காக, லாரி ஓட்டுனரை தாக்கி செல்போனை சேதப்படுத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.
கோயம்பேடு போக்குவரத்து காவலர்களின் சொர்க்கபுரி என்று சொல்லும் அளவுக்கு காவலர்கள் காய்கறி லாரிகள் முதல் சிறிய சரக்கு வாகனங்கள் வரை எதையும் விடுவதில்லை என்றும் கறார் வசூலில் ஈடுபடுவதாகவும் வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டி வந்தனர்.
கோயம்பேட்டில் இருந்து திரும்பும் நிலையில் மாதவரத்தில் லாரி ஒன்றை இரு போக்கு வரத்து போலீசார் மறித்துள்ளனர், உஷாரான ஓட்டுனர் இருவரையும் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இதை பார்த்த போலீசார் அவரை லாரியில் இருந்து இறங்கச்சொல்லி மிரட்டினர்.
அந்த ஓட்டுனர் செல்போனில் படம் பிடித்தபடியே லாரியில் இருந்து இறங்க, ஆத்திரம் அடைந்த இரு போக்குவரத்து போலீசாரும் அவரை தாக்கி செல்போனை மிதித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகின்றது.
இந்த விவகாரம் லாரி உரிமையாளர்கள் சங்கம் வரைக்கு சென்றதால் மிரண்டு போன போக்குவரத்து போலீசார் , பிரச்சனை வேண்டாம் என்று சமாதான பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளனர்.
அந்த லாரி ஓட்டுனரின் உடைந்த செல்போனை கையோடு எடுத்துச்சென்று செல்போன் கடையில் கொடுத்து பழுது பார்த்து கொடுத்த கூத்தும் அரங்கேறி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்துள்ள லாரி உரிமையாளர் சங்கத்தினர் , கடுமையான நிதி நெருக்கடியில் லாரி தொழில் செய்து வருவதாகவும், அத்தியாவசிய பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஓட்டுனரையும் சகமனிதனாக பாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
இதையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புள்ள போக்குவரத்து ஆர்.ஐ மற்றும் காவலரிடம் விரிவான விசாரணைக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Comments