‘கரப்பான் பாப்கார்ன்’ ... பகாசூரன் தியேட்டர் கேண்டீனுக்கு சீல்..! விழித்துக் கொண்ட அதிகாரிகள்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலுள்ள ஸ்ரீ கிருஷ்ணா திரையரங்கு கேண்டீனில் விற்கப்பட்ட பாப்கார்னில் கரப்பான் பூச்சி கிடந்ததால், அங்கு சோதனை நடத்திய உணவு பொருள் பாதுகாப்புத்துறையினர் திரையரங்க கேண்டீனை இழுத்துப்பூட்டினர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பழமையான ஸ்ரீ கிருஷ்ணா திரையரங்கு உள்ளது. இங்கு பகாசூரன் திரைப்படம் வெளியிடப்பட்ட நிலையில் ரசிகர்கள் பலர் படம் பார்த்துக் கொண்டிருந்தனர். படத்தின் இடைவேளையின் போது திருச்செந்தூரை சேர்ந்த மகாதேவி என்பவர் அங்குள்ள கேண்டீனில் பாப்கார்ன் வாங்கியுள்ளார். அதில் ஒரு பாப்கார்னில் கரப்பான்பூச்சி உயிருடன் நெழிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனடியாக இதுதொடர்பாக திரையரங்கு நிர்வாகத்திடமும் , கேண்டீன் பணியாளர்களிடம் புகார் தெரிவித்துள்ளர். திரையரங்கு நிர்வாகத்தில் உள்ள பணியாளர்கள் அவரை தகாத வார்த்தைகளில் பேசியுள்ளனர்.
இதனால் மன உளைச்சலுடன் அதிர்ச்சியடைந்த அவர் சினிமா பார்ப்பதை நிறுத்திவிட்டு அங்கிருந்து உடனடியாக வெளியேறியுள்ளார்.பாப்கார்னில் கரப்பான் பூச்சி கிடந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இந்த திரையரங்கில் கூடுதல் விலைக்கு தரமற்ற தின்பண்டங்கள் விற்கப்படுவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து அந்த திரையரங்கிற்கு சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சக்தி முருகன் கேண்டீனில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார். அங்கு சுகாதாரமற்ற முறையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் கேண்டீன் உணவு பொருட்கள் வைக்கப்பட்டிருப்பதை கண்ட அதிகாரிகள். கிருஷ்ணா திரையரங்கத்தில் கேண்டீன் 5 நாட்களுக்கு செயல் பட தடை விதித்து இழுத்துப்பூட்டி நோட்டீஸ் ஒட்டினர்
Comments