முதியவரிடம் பணம் பறிப்பு.. வடமாநில ஆசாமிகளை மடக்கி பிடித்து தர்ம அடி..! போலீசில் சிக்கியவரும் தப்பினார்..!
கரூர் பேருந்து நிலையத்தில், பேருந்தில் இடம் பிடிப்பது தொடர்பான மோதலில் முதியவரை தாக்கி பணம் பறித்துக்கொண்டு ஓடிய வட இந்திய தொழிலாளர்களை பிடித்து பயணிகள் தர்ம அடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் புலியூரை சார்ந்தவர் செல்வராஜ். 55 வயதான இவர் போக்குவரத்து துறையில் டைம் கேன்வாசராக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று பணியை முடித்துக்கொண்டு வீட்டுக்குச் செல்வதற்காக கரூர் பேருந்து நிலையம் வந்த செல்வராஜ், திருச்சி செல்லும் பேருந்தில் ஏறி தனக்கும், தனது நண்பருக்கும் இருக்கையில் இடம் பிடித்தார். அப்போது, 5க்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்களும் பேருந்திற்குள் ஏறி, செல்வராஜ் பிடித்த இடத்தில் அமர்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் செல்வராஜை தாக்கியதுடன், அவரின் சட்டையை கிழித்து சட்டப்பையில் வைத்திருந்த 7000 ரூபாய் பணத்தையும் பறித்துக்கொண்டு, வட மாநில இளைஞர்கள் தப்ப முயன்றனர். பேருந்தில் இறங்கிய செல்வராஜ் பணத்தை பறித்துக்கொண்டு வடமாநில இளைஞர்கள் தன்னை தாக்குவதாக கூச்சலிட்டார். 3 பேர் தப்பி ஓடிய நிலையில், 2 பேரை மடக்கிப்பிடித்தனர்.
இருவரில் ஒருவன் கையை தட்டிவிட்டு தப்பி ஓட, கையில் சிக்கியவனை அங்கிருந்த நடத்துனர், ஓட்டுனர் மற்றும் பயணிகள் சுற்றிவளைத்து தர்ம அடி கொடுத்தனர்.
அவனை நையப்புடைத்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்த போது அவனும் தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது.
இரவு சுமார் 10 மணியளவில் நடந்த இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருவதால், தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments