மான் வேட்டைக்கு சென்று காணாமல் போன நபர் பாலாற்றில் சடலமாக மீட்பு..!
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே தமிழக - கர்நாட எல்லையில் மான்வேட்டைக்கு சென்று காணாமல் போனதாக தேடப்பட்டவர் பாலாற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கோவிந்தபாடியை சேர்ந்த ராஜா, இளையபெருமாள், ரவி ஆகியோர் செவ்வாய் கிழமை அன்று காவிரி ஆற்றின் மறுகரையில் உள்ள கர்நாடக வனப்பகுதிக்கு வேட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
நள்ளிரவில் வனப்பகுதியில் துப்பாக்கி சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அவர்களை சரணடைய செய்ய வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபோது, வேட்டைக்கு சென்றவர்கள் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால், வனத்துறையினர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியபோது ராஜா மீது குண்டடிபட்டுள்ளது.
வேட்டையாடிய மான் மற்றும் துப்பாக்கியை போட்டுவிட்டு ஆற்றில் குதித்து இளையபெருமாள், ரவி மறுகரைக்கு வந்த நிலையில், ராஜாவை தேடி வந்துள்ளனர். இதுதொடர்பாக மாதேஸ்வரன் மலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மூன்று பேரையும் கர்நாடக போலீசார் தேடி வந்த நிலையில், ராஜா சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகப் பேருந்துகள் கர்நாடகாவுக்கு தொடர்ந்து இயக்கப்படுகின்றன. பதட்டமான சூழல் நிலவி வருவதால் கர்நாடக எல்லையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
Comments