கையில் அரிவாளுடன் கொலைவெறியில் நின்றவரை மடக்கிப்பிடித்த காவலர்..! வழக்கறிஞரின் மணிக்கட்டு துண்டானது..!
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் வழக்கறிஞரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர். கையில் அரிவாளுடன் நின்றவரை பொதுமக்கள் உதவியுடன் போலீஸ்காரர் மடக்கிப்பிடித்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது..
நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர் ராமக்கனி, ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகின்றார். இவரது மகன் வழக்கறிஞர் சிவராமகிருஷ்ணன்.
செவ்வாய்கிழமை இரவு 11 மணியளவில் கடையை மூடிக்கொண்டிருக்கும் போது, அங்கு வந்த 2 மர்ம நபர்கள் சிவராமகிருஷ்ணனின் தலையில் கம்பியால் அடித்து அரிவாளால் வெட்டினர். அவரின் இடது கையில் வெட்டு பட்டு மணிக்கட்டு துண்டான நிலையில் தப்பி ஓடிய அவர் அருகில் இருந்த மளிக்கைக்கடைக்குள் தஞ்சம் அடைந்தார்.
கையில் அரிவாளுடன் விரட்டிச்சென்ற ஆசாமியை கடைக்குள் நுழைய விடாமல் அங்கிருந்த மக்கள் கையில் கல் மற்றும் கம்புகளால் தாக்குவோம் என்று எச்சரித்து மறித்தனர்
அந்த ஆசாமி அரிவாளுடன் தாக்குதலில் ஈடுபட எத்தனித்ததால் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சிங்கிளாக வந்த காவலர் ஒருவர் அரிவாளை கீழே போடச்சொல்லி பேச்சுவார்த்தை நடத்தினர். அரிவாளை கீழே போட்டதும், விரைந்து சென்று அரிவாளை காலால் மிதித்து அவனை மடக்கிப்பிடித்தார். பொதுமக்கள் அவனுக்கு தர்ம அடி கொடுத்தனர்
அரிவாள் வெட்டில் காயம் அடைந்த வழக்கறிஞரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரித்தனர்.
அந்நபர் தூத்துக்குடி மாவட்டம் இடைச்சி விளையை சேர்ந்த பிரசாத் என்பது தெரிய வந்தது. தன் தாத்தாவிற்கு சொந்தமான கட்டடத்தை சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமக்கனி அபகரித்து விட்டதாக கூறி நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் , தீர்ப்பு வழக்கறிஞரின் தந்தை ராமக்கனிக்கு சாதகமாக வந்ததால் ஆத்திரமடைந்து ராமக்கனியை கொலை செய்ய கூட்டாளி முருகனுடன் வந்ததாகவும் , ராமக்கனி இல்லாததால் சிவராமகிருஷ்ணனை கொல்ல முயன்றதும் தெரியவந்தது.
இருவரையும் கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Comments