வழி தெரியாமல் தவித்து நின்ற வட மாநில தொழிலாளி திருடன் என்று அடித்து கொலை..! 6 ஆத்திரக்கார இளைஞர்கள் கைது..!
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே வழிதெரியாமல் தவித்து நின்ற வட மாநில கட்டிடத் தொழிலாளியை திருட வந்ததாக தவறாக நினைத்து அப்பகுதி இளைஞர்கள் கண்மூடித்தனமாக தாக்கியதில், பலத்த காயமடைந்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். உண்மை தெரியாமல் ஆவேச தாக்குதல் நடத்திய 6 பேர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த தாழம்பூர் பகுதியில் காசா கிராண்ட் நிறுவனம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் அங்கு தங்கி கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த காசேட்ரா மோகன் என்பவர் தங்கி கட்டிடப் பணியில் ஈடுபட்டு வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு குடியிருப்பில் இருந்து வெளியே வந்து காரணை பகுதியில் உள்ள ஓட்டலில் உணவு சாப்பிட்டு திரும்பிய மோகன், தான் தங்கி இருக்கும் இடத்துக்கு செல்ல வழி தெரியாமல் காரனை நேரு நகர் வழியாக நடந்து சென்றுள்ளார். அவரை பார்த்த அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் இவர் திருட வந்திருக்கிறார் என எண்ணி அவரை பிடித்து கட்டையாலும், கையாளும் கண்மூடித்தனமாக தாக்கி சாலை ஓரத்தில் உள்ள கம்பத்தில் கட்டிப் போட்டுள்ளனர்.
இது குறித்து தாழம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இரத்தக் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த நபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டையில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்த வட மாநில தொழிலாளி செவ்வாய்க்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை கொலைவழக்காக பதிவு செய்த போலீசார், ஆத்திரத்தில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் காரணை பகுதியைச் சேர்ந்த ஆனந்த், ராஜா, உதயகுமார் , விக்னேஷ், பால முருகன், ரமேஷ் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று பெருமை கொள்ளும், நம்மை நாடி பிழைப்பு தேடிவந்த இடத்தில்... வழிதெரியாமல் குழம்பி நின்ற வட மாநில தொழிலாளியை குறைந்த பட்ச விசாரணை கூட இன்றி அடித்துக் கொலை செய்திருக்கும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Comments