ரவுடிகளுக்கு துப்பாக்கியால் வார்னிங் கொடுத்த கோவை போலீஸ்..!
கோவை நீதிமன்ற வாசல் அருகே நடந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்து அழைத்து வந்த போது வழியில் காவலரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற 2 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்ததாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவையில் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ரவுடி கோகுல் கொலை செய்யப்பட்ட வழக்கில் செல்போன் சிக்னலை வைத்து டிராக் செய்த தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி குன்னூர் விரைந்தனர்.
இதற்கிடையே கோத்தகிரியில் நடந்த வாகன சோதனையின் போது ஹரி, பரணி செளந்தர், கெளதம், அருண் குமார், ஜோஷ்வா, தேவபிரியன் , சூர்யா ஆகிய 7 பேரையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களை தனிப்படை போலீசார் கோவைக்கு அழைத்து வந்தனர்.
மேட்டுப்பாளையம் வனக்கல்லூரிக்கு அருகே வந்த போது, வாந்தி வருவது போலவும், இயற்கை உபாதையை கழிக்க வேண்டும் என்றும் ரவுடிகள் தெரிவித்தனர்.
கீழே இறக்கி விட்டதும் தப்பி ஓடிய அவர்கள் புதரில் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலர் யூசுப் என்பவரை தாக்கியதாகவும், இதையடுத்து தற்காப்புக்காக ரவுடிகள் ஜோஸ்வா, ஒன்ரரை கண் கவுதம் ஆகிய 2 பேரை நோக்கி 4 ரவுண்டு துப்பாக்கியால் சுட்டதில் இருவருக்கும் காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டு ஓட இயலாமல் சுருண்டு விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
காயம் பட்ட ரவுடிகள் இருவரையும் உடனடியாக அருகில் உள்ள மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது
மற்றவர்களை கோவை அழைத்து வந்த காவல்துறையினர், கொலைக்கான பின்னணி குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விவரித்த கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கோவையில் ரவுடிகளுக்கும், சட்டம் ஒழுங்கிற்கு கேடு விளைவிப்பவர்களுக்கும் இடம் இல்லை என்று எச்சரித்துள்ளார்.
Comments