நீதிமன்ற வாசல் அருகே ரவுடியை பலியிட்டது ஏன்? வெளியானது திடுக்கிடும் தகவல் நட்புக்காக கத்தியை எடுத்த விபரீதம்..!

0 2931

கஞ்சா வழக்கு விசாரணைக்காக கோவை நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வெளியே வந்த பிரபல ரவுடி நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கும்பல் கோத்தகிரியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோவை சரவணம்பட்டி அடுத்த கொண்டையம்பாளையம் லட்சுமி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல் என்கிற சுண்டி கோகுல். கொலை, கொலை முயற்சி, அடிதடி, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட 7 வழக்குகளில் தொடர்புடைய கோகுல் மீது கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது.

கஞ்சா கடத்தல் வழக்கு தொடர்பாக கோகுல் கோவை ஜே.எம் 2 நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜராகி கையெழுத்திட்டுவிட்டு நீதிமன்றத்தின் பின் வாசல் வழியாக வெளியேறி தனது கூட்டாளியுடன் அங்குள்ள ஒரு கடையில் தேனீர் அருந்திக் கொண்டிருந்தார். அவர்களை பின்தொடர்ந்து வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் கோகுலை சுற்றிவளைத்து தலை, கழுத்து,தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி சாய்த்தது.

இதைக் கண்ட அருகில் இருந்த அவரது நண்பரான சரவணம்பட்டி அடுத்த சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த மனோஜ் என்பவர் தடுக்க முற்படவே அவரையும் அரிவாளால் தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியானது

கொலையாளிகள் எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் சாவகாசமாக நடந்து செல்வதை சிலர் தங்கள் செல்போன் மூலம் வீடியோ எடுத்தனர்

பட்டப் பகலில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் அந்தப் பகுதியில் இருந்தும் இந்த கொலை சம்பவத்தை தடுக்க இயலவில்லை. அதே நேரத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவர் , மனோஜின் தலையில் வெளியேரிய ரத்தத்தை பொத்திக் கட்டுப்படுத்தினார். வெட்டுப்பட்ட மனோஜோ, தனது கையால் கோகுலின் கழுத்தில் வெளியேறிய ரத்தத்தை தடுத்துக் கொண்டிருந்தார்.

விரைந்து சென்ற போலீசார் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த கோகுலின் உடலை மீட்ட தோடு, படுகாயங்களுடன் இருந்த அவரது நண்பர் மனோஜையும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட கோகுல் கடந்த 2021 ஆம் ஆண்டில் சரவணம்பட்டி அடுத்த உடையாம்பாளையம் பகுதியில் ஸ்ரீராம் என்பவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்பதும் அந்த கொலைக்கு பழிக்கு பழியாக ஸ்ரீராமின் கூட்டாளிகள் பின் தொடர்ந்து வந்து இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்க்கின்றனர்.

வழக்கமாக நீதிமன்றத்திற்கு ஆஜராக வரும் கோகுல் தனது ஆயுதம் தாங்கிய கூட்டாளிகளுடன் வருவது வழக்கம் என்ற நிலையில் சம்பவத்தன்று ஒரே ஒருவர் மட்டும் உடன் வந்ததால் திட்டமிட்டு இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டதாக கூறப்படுகின்றது. உயிரிழந்த கோகுலும் தனது இடுப்பில் பட்டாக்கத்தி வைத்திருந்ததாகவும் சுதாரிப்பதற்குள் கொலையாளிகள் சரமாரியாக வெட்டி சாய்த்திருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

வீடியோ காட்சிகளின் அடிப்படையில் பட்டபகலில் நீதிமன்றத்திற்கு அருகில் எந்த ஒரு பதட்டமுமின்றி கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கொலைக்கார கும்பலை சேர்ந்த ஒன்ற கண் கவுதம், ரத்தினபுரி சூர்யா, வெள்ளலூர் உன்னிகிருஷ்ணன், சித்தாபுதூர் கவாஸ்கான், உள்ளிட்ட 5 பேரை நீலகிரி மாட்டம் கோத்தகிரியில் நடந்த வாகன சோதனையின் போது போலீசார் மடக்கிப்பிடித்தனர். அவர்களை கோவை அழைத்து வந்து விசாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments